கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா பகுதியில் நடைபெற்ற ஒரு இறுதிச்சடங்கு நிகழ்வு அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. தனது கணவரின் இறுதிப் பயணத்தின்போது அவருக்கு இறுதி முத்தமிட்ட 71 வயது மூதாட்டி, அதே இடத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குரியன் ஜோசப் (வயது 73). இவர் அப்பகுதியில் ஒரு பிரபல வணிகராகவும், கேரளா காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும், பாலா கிரிஷி பவன் ஆலோசனைக் குழுவின் தீவிர உறுப்பினராகவும் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி இவர் காலமானார்.
இவரது இறுதிச்சடங்கு கடந்த திங்கட்கிழமை காலை இவர்களது இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதிக் கட்டமாக, மதியம் 11.00 மணியளவில் குரியனின் உடல் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட இருந்தது. அப்போது, அவரது மனைவியான ஷெர்லி குரியன் (வயது 71), தனது கணவரின் சவப்பெட்டியை மூடும் முன்பு அவருக்கு உருக்கமாக இறுதி முத்தமிட்டுள்ளார். கணவரின் பிரிவைத் தாங்க முடியாமல் கதறியழுத அவர், திடீரெனக் கணவரின் உடல் அருகிலேயே மயங்கிச் சரிந்து விழுந்தார்.
உடனே குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ந்துபோய் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஷெர்லியின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கணவர் இறந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள், மனைவியும் அடுத்தடுத்து உயிரிழந்தது குடும்பத்தினரையும் ஊர்மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த இந்தத் தம்பதிக்கு ஏஞ்சலா குரியன், அன்னா குரியன், அபி குரியன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தனித்தனியாக நடக்கவிருந்த இறுதிச்சடங்கு, ஷெர்லியின் திடீர் மறைவைத் தொடர்ந்து ஒரு இணைந்த இறுதிப் பயணமாக மாற்றப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு ஷெர்லியின் உடல் இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பிரியமான இந்தத் தம்பதியினரின் உடல்கள் ஒரே நேரத்தில் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள குடும்பக் கல்லறையில் ஒன்றாக நல்லடக்கம் செய்யப்பட்டன.
