தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் நலன் சார்ந்த மிக முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

அதன்படி சட்டப்பேரவை விவாதத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர், மாநிலத்தின் பாலுற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி தற்போதைய கொள்முதல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 38 ரூபாய் ஆக இருக்கும் நிலையில் கூடுதலாக ரூ. 3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் புதிய கொள்முதல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 41 ஆகும்.

கால்நடை தீவனச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, தொகுதி சார்ந்த ஆய்வுப் பணிகளை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தடையின்றி விரைவாக மேற்கொள்வதற்கு ஏதுவாக புதிய திட்டம் ஒன்றை முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

தொகுதி சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அனைத்து MLA-க்களுக்கும் புதிய கார் வழங்கப்படும். வாகனப் பராமரிப்பு மற்றும் பயன்பாட்டிற்காக மாதம் ரூ. 75,000 வாகன படி வழங்கப்படும்.

தொகுதி மக்களுடனான தொடர்பை விரிவுபடுத்தவும், கள ஆய்வுகளை வேகப்படுத்தவும் இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த இரு முக்கிய அறிவிப்புகளுக்கும் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.