பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையையொட்டி சிவபெருமானுக்கு நீர் செலுத்துவதற்காக பலர் கோசி தடுப்பணைக்கு வந்திருந்தனர். அப்போது அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான சஞ்சித் குமார் சர்மாவும் தனது நண்பர்களுடன் அங்கு சென்றிருந்தார். ஆற்றில் இருந்து நீர் எடுக்கச் சென்ற அவர், சமூக வலைதளத்திற்காக விடியோ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவர் கோசி ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சித் குமார் சர்மா கோசி தடுப்பணையின் அருகே அதிகாலை சுமார் 2.30 மணியளவில் சென்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து ஆற்றின் ஆழமான பகுதியில் அமைந்திருந்த தூணை நோக்கி அவர் கீழே இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர் எடுத்துக்கொண்டிருந்தபோது விடியோவும் பதிவு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் பாலத்தை நோக்கி மேலே ஏற முயன்றபோது, அருகில் இருந்த மின்கம்பத்தை பிடித்தபடி ஏறியுள்ளார். அப்போது அவரது கை திடீரென நழுவியதால் நிலை தடுமாறி கோசி ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
இளைஞர் ஆற்றில் விழுந்ததும் அங்கு இருந்த பக்தர்கள் மற்றும் காவடியேந்தியவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நேபாள போலீஸார் அங்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தியதுடன், ஆற்றில் விழுந்த சஞ்சித் குமார் சர்மாவை தேடும் பணியையும் தொடங்கினர். இந்த சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. சஞ்சித்துடன் சென்றிருந்த நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். ஆற்றில் அவர் தவறி விழுந்த சம்பவம் குறித்த விசாரணையும் தேடுதல் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோசி ஆற்றில் தற்போது மழை காரணமாக நீர்வரத்து அதிகமாகவும், நீரோட்டம் வேகமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவன் மாத திங்கள்கிழமைகளில் கோசி தடுப்பணைக்கு ஏராளமான பக்தர்கள் நீர் எடுக்க வருவது வழக்கம். இதுபோன்ற நேரங்களில் ஆற்றின் ஆழமான அல்லது ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். சமூக வலைதளத்திற்காக விடியோ அல்லது ரீல்ஸ் எடுக்கும்போது பாதுகாப்பை புறக்கணிக்கக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆபத்தான இடங்களில் விடியோ எடுப்பதன் அபாயத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.
