உலகம் முழுவதும் சுற்றுலா செல்பவர்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும், வரலாற்றுச் சின்னங்களையுமே பார்த்து ரசிப்பது வழக்கம். ஆனால், சீனாவில் தற்போது இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே ‘டார்க் டூரிசம்’ எனும் புதிய மற்றும் வினோதமான டிரெண்ட் வேகமாகப் பரவி வருகிறது. வழக்கமான சுற்றுலாப் பயணிகளைப் போல இல்லாமல், சோகமான சம்பவங்கள் அல்லது ஆபத்தான சூழல்களை நேரில் அனுபவிக்கும் இந்த விபரீதப் பயணம் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹங்சோ நகரில் நாட்டின் முதல் அதிநவீன செயற்கைப் பேரிடர் மையம் ‘லுக்சிங் பேஸ்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. பிரபல சீன சாகசப் பயணிகளான சாங் சின்யு மற்றும் லியாங் ஹாங் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த மையம், குறுகிய காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
வரலாற்றுப் பேரழிவுகள் நடந்த உண்மையான இடங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, செயற்கையாக உருவாக்கப்படும் பயங்கரமான இயற்கைச் சீற்றங்களை நேரில் சந்தித்து, அந்த ஆபத்திலிருந்து எப்படித் தப்பிப்பது என்ற பயிற்சிகளைப் பெறுவதற்காகச் சீன இளைஞர்கள் வாரி இறைக்கும் தொகையைக் கொடுத்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த மையத்தில் மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் செயற்கைப் புயல், வெளுத்து வாங்கும் கனமழை மற்றும் திடீர் நகர்ப்புற வெள்ளப்பெருக்கு போன்ற நிஜத்தைப் போன்றே அதிரவைக்கும் ஆபத்தான சூழல்கள் அப்படியே உருவாக்கப்படுகின்றன. இங்கு வருகை தருபவர்கள் வெப்பப் பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைக்கவசங்களை அணிந்துகொண்டு, நிஜப் பேரிடரின் நடுவே தனித்து நின்று தப்பிப்பிழைக்கும் வழிமுறைகளைக் கண்முன்னே கற்றுக்கொள்கின்றனர்.
இந்த சிலிர்க்க வைக்கும் சாகச அனுபவத்தைப் பெறுவதற்காக மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனர். தனிநபர் பெரியவர்களுக்கான கட்டணம்: 899 யுவான் (சுமார் $135 அமெரிக்க டாலர்கள்). குடும்பப் தொகுப்புக் கட்டணம்: 5,000 யுவான் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த மையம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 1,60,000-க்கும் அதிகமானோர் ஆர்வமுடன் வருகை தந்து இந்த ஆபத்தான சாகசத்தை அனுபவித்துள்ளனர்.
இந்த செயற்கைப் பேரிடர் அனுபவ மையம் இணையத்தில் பலத்த விவாதத்தைக் கிளப்பி வருகிறது. ஆபத்தான காலங்களில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் தற்காப்புப் பயிற்சிகளைப் பெற இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு என்று சிலர் இதற்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர். அதேவேளையில், நிஜ வாழ்க்கையில் வெள்ளம் மற்றும் இயற்கைச் சீற்றங்களால் தங்களின் வீடுகளையும், உடமைகளையும், உறவினர்களையும் இழந்து தவிக்கும் மக்களின் வேதனையை, வணிக ரீதியிலான பொழுதுபோக்காக மாற்றுவது எந்த விதத்தில் நியாயம்? இது மக்களின் துயரத்தைக் கொச்சைப்படுத்துவது போல் உள்ளது எனச் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
