பல்வேறு வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகையை வழங்காமல் தவெக அரசு அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டி, திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறத் தேர்வாகி வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள், தங்களுக்கு உரிய நிதி கிடைக்காமல் தவித்து வருவதாக இணையத்தில் வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில், அதனைச் சுட்டிக்காட்டி கனிமொழி எம்பி தவெக அரசை மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வியைத் தடையின்றித் தொடர வேண்டிய மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகையை வழங்காமல் தாமதப்படுத்துவது அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காகவே, இதையும் திட்டமிட்டு மறைமுகமாகச் செயலிழக்கச் செய்து நிறுத்துவதுதான் இந்த அரசின் நோக்கமா?” என்று தவெக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மாணவர்கள் வெளியிட்டுள்ள கண்ணீர் வீடியோவைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாணவர்களின் கல்வியையும் வாழ்க்கையையும் பலிகடாவாக்கக் கூடாது என்றும், உடனடியாக நிலுவையில் உள்ள உதவித்தொகையை வழங்கி அவர்களின் படிப்பைத் தடையின்றித் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்தியுள்ளார். கனிமொழியின் இந்த அதிரடி அறிக்கை தற்போது தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
