கல்வி புகட்ட வேண்டிய பள்ளிக்கூடத்திலேயே, மாணவிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியிருப்பது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவர தொடர்ந்து செல்போன் மூலமாகப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகப் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​ஆசிரியர் என்பதால் தொடக்கத்தில் அச்சமடைந்த அந்த மாணவி, நாளடைவில் தொல்லை எல்லை மீறிச் சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்துத் தன் பெற்றோரிடம் கதறி அழுதபடி மாணவி கூறிய தகவலைக் கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், சற்றும் தாமதிக்காமல் உடனடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சண்முக சுந்தரராஜை போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர்.

​இந்த வழக்கில் காவல்துறையினர் நடத்திய மேல் விசாரணையில் மேலும் ஒரு திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் மாணவிக்குச் செய்த இந்த பாலியல் தொந்தரவுகள் அனைத்தும், அதே பள்ளியில் பணியாற்றி வரும் திவ்யா என்ற ஆசிரியைக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும், அவர் அதைக் கண்டிக்காமல் ஆசிரியருக்கு முழுமையாக உடந்தையாகச் செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

​ஒரு பெண்ணாகவும் ஆசிரியையாகவும் இருந்து கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக நிற்காமல் இந்த அக்கிரமத்திற்கு உடந்தையாக இருந்த ஆசிரியை திவ்யாவையும் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி வளாகத்திற்குள்ளேயே அரங்கேறிய இந்த கொடூரச் சம்பவமும், ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஜோடியாகக் கைது செய்யப்பட்ட செய்தியும் தஞ்சாவூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.