மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில், கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி எப்போதும் போல வீட்டை விட்டு வெளியேறிய அந்த 17 வயது சிறுவன், மீண்டும் தன் வீட்டிற்கு உயிருடன் வரப்போவதில்லை என்பதை அந்த குடும்பம் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காது. சிறுவன் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினரும் காவல்துறையினரும் தீவிரமாகத் தேடி வந்தனர். ஆனால், ஐந்து நாட்கள் கழித்து ஆகஸ்ட் 11-ஆம் தேதி, அருகில் இருந்த ஒரு ஏரியின் நடுவே அந்த சிறுவனின் சடலம் மிதந்து வந்த காட்சி, ஒட்டுமொத்த போபால் நகரத்தையுமே உறைய வைத்தது.

​வெறும் சாதாரணமான ஒரு கொலை வழக்காகத் தொடங்கப்பட்ட இந்தச் விசாரணையில், காவல் துறையினருக்கு அடுத்தடுத்து கிடைத்த தகவல்கள் இரத்தத்தை உரைய வைப்பதாக மாறியது. சிறுவனின் உடலில் இருந்து ஒரு குறிப்பிட்ட உடற்பாகம் கொடூரமான முறையில் அகற்றப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனையின் போது தெரியவந்தது. மேலும், அந்த உடற்பாகம் சர்வதேச சந்தையில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்டு, வெளிநாட்டிற்கு கடத்த திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

​இந்த கொடூரக் குற்றத்தின் பின்னணியைக் கண்டறிய காவல்துறை களமிறங்கி, ஒரு சிறுவன் உட்பட சுமார் 13 பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன், கொடூரர்களால் அறுத்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தச் சிறுவனின் உடற்பாகம் இதுவரை மீட்கப்படவில்லை என்பதும், அதை எங்கே மறைத்து வைத்துள்ளார்கள் அல்லது ஏற்கனவே வெளிநாட்டிற்கு கடத்திவிட்டார்களா என்பதும் காவல் துறையினருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

​இவை அனைத்திற்கும் மேலாக, அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு 17 வயது சிறுவன், தன் உயிருக்கும் இதேபோல ஆபத்து ஏற்பட்டதாகவும், தன்னிடம் ஒரு கும்பல் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளான். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பிருக்கிறதா, ஒரு பெரிய சர்வதேச உறுப்பு கடத்தல் கும்பல் இந்த நகருக்குள் ஊடுருவி 17 வயது சிறுவர்களைக் குறிவைத்து இயங்கி வருகிறதா என்ற கோணத்தில் போபால் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகிறது.