ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்பநாடு மாவட்டம் நரசராவ்பேட்டை பகுதியில் நடந்துள்ள ஒரு திருட்டுச் சம்பவம், காவல்துறையினரையே வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. வீட்டில் திருடப்பட்ட லட்சக்கணக்கான பணத்தில், பெரும்பகுதியை ஒரு மன்னிப்புக் கடிதத்துடன் திருடனே நேரில் வந்து திருப்பிக் கொடுத்த விசித்திரமான நிகழ்வு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
நரசராவ்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் ஆதிநாராயண ரெட்டி என்பவரது வீடு பூட்டியிருப்பதை பயன்படுத்திக் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கடந்த ஜூலை 30-ஆம் தேதி உறவினர் ஒருவரின் மறைவு காரணமாக வெளியூர் சென்றிருந்த தம்பதியினர் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த 20 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 317 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் எந்தச் துப்பும் துலங்கவில்லை. இருப்பினும், ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் 30 நிமிடங்கள் அப்பார்ட்மெண்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதை வழக்கமாகக் கொண்ட சதித்திட்டத்தின் மூலமே இந்தத் திருட்டு அரங்கேறியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த வழக்கிற்கு முழுமையான திருப்பம் தரும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட ஆதிநாராயண ரெட்டி வீட்டின் அருகே உள்ள ஒரு செருப்புக் கடை அருகில் ஒரு சந்தேகத்திற்கிடமான பை கிடந்துள்ளது. அதனைத் திறந்து பார்த்தபோது, அதில் 19 லட்சம் ரூபாய் பணமும், ஒரு கடிதமும் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயினர்.
அந்தக் கடிதத்தில், தான் திருடிய பணத்தில் தனது பங்கிற்கு வந்த 19 லட்சத்தைத் திருப்பித் தருவதாகவும், தங்க நகைகள் குறித்துத் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் திருடன் மன்றாடியிருந்தான். மேலும், திருடர்களைக் கண்டுபிடிப்பதற்காகக் குடும்பத்தினர் பில்லி சூனியம் அதாவது கறுப்பு வித்தை அல்லது மாந்திரீகம் மூலம் திருடர்களைக் கண்டறியும் முறையை ஏவுவார்கள் என்று பயந்துபோய்விட்டதாகவும், தன்மீது எந்தவிதத் தந்திர மந்திரப் பிரயோகமும் செய்ய வேண்டாம் என்றும் அந்தக் கடிதத்தில் உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.
உள்ளூர் தகவலின்படி, திருடப்பட்ட பொருட்களை மீட்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் பாதிக்கப்பட்ட குடும்பம் மாந்திரீகர் உதவியுடன் சூனியம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் பேச்சு அடிபட்டுள்ளது. இந்த விஷயம் எப்படியோ திருடர்களின் காதுகளுக்கு எட்டியுள்ளது. மாந்திரீகப் பயமும், காவல் துறை பிடியிலிருந்து தப்பும் நோக்கமும் சேர்ந்துதான் அந்தத் திருடனைப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வைத்துள்ளது.
தற்போது அந்தப் பணத்தையும் கடிதத்தையும் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், கைரேகை மற்றும் கையெழுத்து பரிசோதனைக்காக அதனை தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்பார்ட்மெண்ட் குறித்த ரகசியங்கள் மற்றும் மின்தடை நேரம் தெரிந்த நபரைக் குறிவைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
