தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு படுகொலைச் சம்பவம், ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கி எடுத்துள்ளது. காதலுக்குத் தடையாக இருந்ததாகவும், ரகசியங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறி, காதலியையும் அவளது கணவனையும் ஒரு போலீஸ்காரரே கட்டையால் அடித்துக் கொன்று குழியில் புதைத்துள்ள கொடூரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது சூர்யாபேட்டை மாவட்டத்தை  சேர்ந்தவர் நாகுலு (48), இவரது மனைவி பூபா (41). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அவர்களுக்குத் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதற்கிடையே, மகளுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, பூபா அடிக்கடி காவல் நிலையத்திற்குச் சென்று வந்துள்ளார்.

அப்போது அங்குப் பணியில் இருந்த போலீஸ்காரர் ஷெரிப் என்பவருடன் பூபாவுக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததோடு, ஷெரிப்பிடமிருந்து 3 லட்சம் ரூபாயைப் பெற்று தனது மருமகனுக்கும் பூபா கொடுத்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஷெரிப்புக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடநத்ன. இதனால் தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு ஷெரிப் கேட்க, பூபாவோ பணத்தைத் தருவதற்கு மறுத்ததோடு நிறுத்தாமல், தங்களது கள்ளக்காதல் விவகாரத்தையும், உல்லாசமாக இருந்த ரகசியங்களையும் வருங்கால மனைவியிடம் கூறிவிடுவேன் என்று மிரட்டத் தொடங்கினார்.

தன் திருமண வாழ்க்கை மற்றும் மானத்திற்குப் பங்கம் வந்துவிடுமென அஞ்சிய போலீஸ்காரர் ஷெரிப், பூபாவை எப்படியாவது தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். இதற்காக, வங்கியில் ஆடு வாங்க லோன் வாங்கித் தருவதாகவும், வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதால் ஆட்டுக் கொட்டகையைத் தயார் செய்யுமாறும் பூபாவிடம் நாடகமாடினார். கடந்த வாரம் கொட்டகையைச் பார்வையிடச் சென்றபோது பூபாவின் கணவர் நாகுலுவும் உடன் வந்ததால் அன்று திட்டம் நிறைவேறவில்லை. இதனால் கோபமடைந்த ஷெரிப், கணவன்-மனைவி இருவரையும் சேர்த்தே கொலை செய்ய முடிவெடுத்து, காவல் நிலையத்திற்கு டீ கொண்டு வரும் சுந்தர் என்பவரது உதவியை நாடினார்.

அதன்படி, நேற்று முன்தினம் ஆட்டுக் கொட்டகையைக் காட்டுவதாகக் கூறி நாகுலுவை மட்டும் தனியாக அழைத்துச் சென்ற ஷெரிப், அங்கு அவரை மரக்கட்டையால் தாடிக் கொடூரமாகக் கொன்றார். பின்னர், ஆட்டு எருவை கொட்டுவதற்காகத் தோண்டப்பட்டிருந்த குழியிலேயே நாகுலுவின் உடலைப் புதைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சுந்தரை பூபாவின் வீட்டிற்கு அனுப்பி அவரையும் வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில், திட்டம் போட்டபடியே பூபாவையும் அதேபோலக் கட்டையால் அடித்துக் கொன்று மற்றொரு குழியில் புதைத்துவிட்டுத் தப்பியோடினர்.

இதற்கிடையில் நாகுலுவும், பூபாவும் திடீரென மாயமானதால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர். காவல் துறை விசாரணையின் போது குற்றவாளி போலக் நாடகமாடி போலீசாருடனேயே ஷெரிப் உடன் சென்றதும் தெரியவந்தது. இறுதியில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுந்தர் சிக்கினார். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், போலீஸ்காரர் ஷெரிப்தான் இந்த இரட்டைக் கொலையின் மூளையாகச் செயல்பட்டது அம்பலமானது. இதனையடுத்து, கொடூரச் செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஷெரிப் மற்றும் சுந்தர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.