மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் கணவரை கொலை செய்ய முயன்றதாக 38 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் பிரவீண் ஜக்தாப்புக்கு ஜூஸில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் தொடர்ந்து இரண்டு நாட்கள் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் சற்று கண்விழித்தபோது, அந்த பெண் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து கணவரை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைக்கவும் முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் பணியாளர்களை வைத்து ஏற்கெனவே செங்கல் மற்றும் சிமெண்டால் ஒரு சதுர வடிவ அமைப்பு உருவாக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதில் கணவரை படுக்க வைத்து, மேலே மரப்பலகையை வைத்து மூடி மறைக்க முயன்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரவீண் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மயக்கத்தில் இருந்து சற்று விழித்தபோது தன்னை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக பிரவீண் தெரிவித்துள்ளார். தன்னை தாக்க வேண்டாம் என்று கெஞ்சியபோதும் அந்த பெண் கேட்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வீட்டில் இருந்த தனது தாயாருக்கும் தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் அவரது தாயார் சுயநினைவுக்கு வந்து மற்றொரு மகனுக்கு தகவல் தெரிவித்ததாகவும், அதன் மூலம் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு காரணங்கள் இருக்கலாம் என்றும் பிரவீண் சந்தேகம் தெரிவித்துள்ளார். தனது மனைவி தொடர்பாக சில சந்தேகத்திற்குரிய விஷயங்களை கவனித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிமையான தூக்க மாத்திரைகளை வழங்கியதாகக் கூறப்படும் மருந்தக உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தனது இரண்டு குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்துள்ள அவர், அவர்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என போலீஸாரிடம் கோரியுள்ளார். பிரவீணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
