வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் நம்முடன் நமது அன்பானவர்கள் இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் எதிர்பார்ப்போம். அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியான நாளில், தனியாக நின்றுகொண்டிருந்த இளம் ராணுவ வீரர் ஒருவரை அவரது உயர் அதிகாரி அரவணைத்துத் தேற்றிய நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இணையவாசிகள் பலரின் கண்களைக் குளமாக்கியுள்ளது.

இந்தோனேசியாவில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி நிறைவு மற்றும் அணிவகுப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பயிற்சி முடிந்து வெளியே வந்த இளம் வீரர்கள் அனைவரும் தங்களது பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களைக் கட்டியணைத்துத் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

ஆனால், அந்தப் பெருமிதமான தருணத்திலும் ஒரு இளம் வீரர் மட்டும் எந்தவித உறவினர்களின் வருகையும் இல்லாமல், கூட்டத்தின் நடுவே தனியாக நின்றுகொண்டிருந்தார். மற்றவர்கள் குடும்பத்தினருடன் ஆரவாரமாகக் கொண்டாட்டத்தில் இருக்க, இந்த வீரர் மட்டும் ஏக்கத்துடன் யாராவது தன்னைத் தேடி வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் ஓரமாக நின்ற காட்சி பார்ப்போரின் இதயத்தை கலங்க  செய்தது.

 

இளம் வீரர் ஒருவரால் தனியாக நிற்பதைக் கவனித்த அவரது கமாண்டர், உடனே தன் பார்வையை அவர் மீது திருப்பினார். அங்கிருந்து நடந்து வந்த அவர், அந்தத் தவித்துப்போன வீரரின் அருகில் சென்று திடீரெனக் கட்டிப்பிடித்து அரவணைத்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்ற அந்த இளம் வீரர், கமாண்டர் தன்னை அணைத்ததும் தனது சோகத்தை அடக்க முடியாமல் உடைந்து அழுதார். எந்தவித வார்த்தைகளும் இன்றி, ஒரு எளிய அரவணைப்பின் மூலம் அந்த வீரருக்கு ஆறுதலும், சொந்தபந்தம் போன்றதொரு பாதுகாப்பையும் அந்த அதிகாரி வழங்கிய விதம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதும், உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் தங்களது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1996-ம் ஆண்டு தனக்கும் இதே போன்றதொரு அனுபவம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட ஒரு பயனர், “எனது ராணுவ அணிவகுப்பின் போது என் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் யாரும் வரவில்லை… எனது வாழ்வின் மிகச்சிறந்த மற்றும் மோசமான நாள் அது” என்று தனது ஏக்கத்தைப் பதிவிட்டுள்ளார். அதேசமயம், இந்தோனேசியா போன்ற தீவு நாடுகளில் தொலைதூரத்தில் வசிக்கும் குடும்பத்தினரால் பிரம்மாண்டச் செலவுகள் காரணமாகப் பயணிக்க இயலாமல் போயிருக்கலாம் என்று மற்றுமொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கவலைப்படாதீர்கள் சகோதரா, உங்களை சகோதரர்களாகப் பாவிக்கும் உங்கள் ராணுவ நண்பர்கள் உங்களோடு இருக்கிறார்கள்” என்று அந்த வீரருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். வாழ்க்கையின் தனிமையான தருணத்தில் அரவணைப்புக் கொடுத்துத் தூக்கிவிட்ட அந்த கமாண்டரின் மனிதநேயச் செயல், தற்போது இன்டர்நெட்டின் பேசுபொருளாக மாறியுள்ளது.