ஜெய்ப்பூரில் உள்ள  பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த பிரின்ஸ் சோனி என்ற 17 வயது மாணவன், காலையில் முற்றிலும் ஆரோக்கியமாகவே பள்ளிக்குச் சென்றுள்ளான். ஆனால், மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி கேன்டீனில் வாங்கிய கட்லெட்டைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அவனுக்கு உடல்நிலை மோசமடைந்து மயங்கி விழுந்துள்ளான். அந்த கட்லெட் கெட்ட வாசனையுடன் இருந்ததாகவும், அதைச் சாப்பிட்ட பிறகே பிரின்ஸுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாகவும் அவனது வகுப்புத் தோழன் தெரிவித்துள்ளான்.

மாணவன் மயங்கி விழுந்ததும், பள்ளி ஆசிரியர்கள் அவனை ஒரு அறைக்குக் கொண்டு சென்று பதிவேட்டால் விசிறி முதலுதவி அளிக்க முயன்றுள்ளனர். பின்னர் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, குடும்பத்தினர் வந்த பிறகே மாணவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான். ஆனால், அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதனால், “என் மகனைத் திரும்பக் கொண்டு வாருங்கள்” என்று அவனது தாய் நிர்மலா கதறி அழுது துடித்து வருகிறார்.

பள்ளிக்கு மிக அருகிலேயே மருத்துவமனை இருந்தும், மாணவனை உடனடியாக அங்கு அழைத்துச் செல்லாமல் பள்ளி நிர்வாகம் தாமதித்ததே அவனது உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். சிசிடிவி காட்சிகளிலும் மாணவனுக்கு ஆரம்பத்தில் உரிய மருத்துவ உதவி கிடைக்காமல் தாமதமானது தெரியவந்துள்ளது. சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால் தன் ஒரே மகனின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியுமே என்று தந்தை அமித் சோனி கண்ணீருடன் கேள்வி எழுப்புகிறார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளி உணவகத்தின் உணவு உரிமம், உணவின் தரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள் ஆகியவை குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பெற்றோர் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவனது மரணத்திற்கான உண்மையான காரணம் என்னவென்று முழுமையாகத் தெரியவரும் எனத் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். காலையில் நலமாகப் பள்ளிக்குச் சென்ற பெற்றோர் விரும்பிய ஒரே மகன், பிணமாக வீடு திரும்பிய இந்த சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.