கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மன் கோவில்களில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவில் விளவங்கோடு வட்டத்தில், மார்த்தாண்டத்திலிருந்து தேங்காய்பட்டணம் செல்லும் வழியில் உள்ள பைங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில், அடர்ந்த ஆலமரங்களால் சூழப்பட்டு இக்கோவில் காட்சியளிக்கிறது.

இக்கோவில் உருவானதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான வரலாறு உள்ளது. செம்பன் என்பவர் தனது மகளுக்குக் குழந்தை வரம் வேண்டி இப்பகுதியில் பீடம் அமைத்து பத்திரகாளி அம்மனை வழிபட்டார். நாளடைவில் அவரது மகளுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவே, இந்த அதிசயத்தை மக்கள் அறியத் தொடங்கி, அந்த பீடத்தைச் சுற்றிச் சிறிய கோவில் அமைத்து வழிபடத் தொடங்கினர்.

அம்மனின் அற்புதத்திற்கு மற்றொரு சான்றாக ஒரு வரலாற்று நிகழ்வு கூறப்படுகிறது. முற்காலத்தில் காலரா நோயால் பாதிக்கப்பட்ட தனது குழந்தையைக் காப்பாற்ற ஒரு தாய் இக்கோவிலில் கதறி அழுதார். அன்று இரவே அத்தாயின் கனவில் தோன்றிய அம்மன், குழந்தையைத் தடவிக் கொடுத்து நோய் குணமடைந்துவிட்டதாகக் கூறினார். மறுநாள் காலையில் அக்குழந்தையின் காலரா நோய் முற்றிலும் குணமாகி இருந்தது.

இந்த அற்புத நிகழ்வுகளுக்குப் பிறகு குமரி மாவட்டம் மட்டுமின்றி, பக்கத்து மாநிலமான கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வரத் தொடங்கினர். குழந்தையில்லாத தம்பதிகள் இக்கோவிலில் வந்து வேண்டி, குழந்தை பாக்கியம் கிடைத்ததும் நேர்த்திக்கடனாக வாழைக் குலைகளை வழங்குகின்றனர். மேலும் பால் குட நேர்ச்சை, பொங்கலிடுதல் போன்ற வழிபாடுகளும் இங்கு வெகுவிமர்சையாக நடைபெறுகின்றன.

இங்கு மூலவரான ஸ்ரீபத்ரேஸ்வரி அம்மனுடன் கணபதி, அய்யப்பன், பாலமுருகன், கிருஷ்ணசுவாமி, துர்க்கை, இசக்கியம்மன், நாகராஜர் மற்றும் நவகிரகங்களுக்கும் தனிச்சந்நிதிகள் உள்ளன. குறிப்பாக ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொள்ளும் சிறப்புத் திருவிளக்கு பூஜையும், அர்ச்சனைகளும் மிக விமர்சையாக நடைபெற்று வருகின்றன.