விக்கல் வருவது இயல்பான ஒன்றுதான் என்றாலும், அது அடிக்கடி வருவதும் 48 மணி நேரத்திற்கு மேலாக நீடிப்பதும் தீவிர உடல்நலப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். “யாரோ நினைக்கிறார்கள்” என்று நாம் ஜாலியாகக் கடந்துபோகும் விக்கல், சில நிமிடங்களில் தானாகவே நின்றுவிட்டால் பிரச்சனையில்லை. ஆனால் தெளிவான காரணமே இல்லாமல் இரண்டு நாட்களுக்கும் மேலாக நீடித்தால் உடனடியாகக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதிகமாகச் சாப்பிடுவது, அவசரமாக உண்பது அல்லது குளிர்ந்த நீரைக் குடிப்பது போன்றவற்றால் ஏற்படும் சாதாரண விக்கல் சில நிமிடங்களில் மறைந்துவிடும். ஆனால், 48 மணி நேரத்திற்கு மேல் தொடரும் விக்கல் செரிமானக் கோளாறுகள், நரம்பு மண்டலப் பாதிப்புகள், நுரையீரல் நோய்கள், உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை அல்லது குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படுபவையாக இருக்கலாம் எனச் சென்னை ரேலா மருத்துவமனையின் உள் மருத்துவப் பிரிவு ஆலோசகர் டாக்டர் மெலிசா சத்யன் விளக்குகிறார்.

விக்கலுடன் சேர்ந்து கடுமையான தலைவலி, உடல் சோர்வு, கை கால்கள் மரத்துப்போதல், பேசுவதில் சிரமம், நெஞ்சுவலி அல்லது காரணமின்றி உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். 48 மணி நேரத்திற்கு மேலான விக்கலை ‘Persistent Hiccups’ என்றும், ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் விக்கலை ‘Intractable Hiccups’ என்றும் அழைப்பர். இவற்றுக்குக் கட்டாயம் விரிவான மருத்துவச் பரிசோதனையும் சிகிச்சையும் தேவை.

சாதாரண விக்கல் ஏற்படும் போது குளிர்ந்த நீரைக் குடிப்பது, சில வினாடிகள் மூச்சை அடக்கிப் பிடிப்பது போன்ற எளிய வீட்டு வைத்தியங்கள் தற்காலிக நிவாரணம் தரும். மேலும், ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது, மது அருந்தாமல் இருப்பது மற்றும் மிதமான சூட்டில் உணவு உண்பது போன்ற பழக்கங்கள் விக்கல் வராமல் தடுக்க உதவும். இருப்பினும், இவை தற்காலிகத் தீர்வே தவிர நாள்பட்ட விக்கலுக்கான சிகிச்சையாகாது.

எனவே, சில நிமிடங்களில் நிற்கும் விக்கலைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை என்றும், ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் தொடரும் விக்கலையோ அல்லது பிற ஆபத்தான அறிகுறிகளுடன் வரும் விக்கலையோ சாதாரணமாக எண்ணாமல், உரிய மருத்துவ ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.