பூசணி விதைகள் அளவில் சிறிதாக இருந்தாலும், உடலுக்குத் தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மிகச் சிறந்த உணவாகும். இதில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற பல முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
பூசணி விதைகளில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, செல்கள் சேதமடைவதைத் தடுக்க உதவுகின்றன. மேலும், இதில் உள்ள துத்தநாகம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, பருவகாலக் காய்ச்சல் மற்றும் பிற தொற்றுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.
இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பூசணி விதை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் நிறைந்துள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்து, ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதேபோல, இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தைச் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்குப் பூசணி விதை ஒரு நல்ல தீர்வாகும். இதில் உள்ள டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உடலில் செரோட்டோனின் உற்பத்தியை அதிகரித்து, இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவுகிறது.
டைப்-2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் பூசணி விதையைத் தங்கள் உணவில் அளவோடு சேர்த்து வரும்போது, அது ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தப் பெரிதும் துணைபுரிகிறது. எனவே, தினமும் சிறிதளவு பூசணி விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
