இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலரும் இரவு 9 அல்லது 10 மணிக்குப் பிறகுதான் உணவருந்துகின்றனர். மனித உடல் ஒரு இயற்கையான உயிரியல் கடிகாரத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இரவு நெருங்கும் போது உடல் ஓய்வு நிலைக்கு மாறுவதால், செரிமான அமைப்பின் வேகமும் குறைகிறது. இந்த நேரத்தில் அதிக எண்ணெய் அல்லது கனமான உணவைச் சாப்பிடுவது நீண்ட காலத்தில் பல உடல்நலச் சிக்கல்களுக்குக் காரணமாக அமையக்கூடும்.
இரவு தாமதமாக உணவு சாப்பிடுவதால் அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் தொண்டையில் எரிச்சல் போன்ற அமிலத்தன்மைப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும், இரவில் உடலின் வளர்சிதை மாற்ற வேகம் குறைவதால், அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாகச் சேமிக்கப்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும் அபாயமும் உருவாகிறது. தூங்குவதற்கு முன் சாப்பிடுவது இரத்தச் சர்க்கரை அளவை உயர்த்தி, இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடும்.
வயிறு செரிமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது உடலால் முழுமையான ஓய்வு நிலைக்குச் செல்ல முடியாது. இதனால் ஆழ்ந்த தூக்கம் பாதிக்கப்பட்டு, காலையில் சோர்வு மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர்ந்து தூக்கம் கெடுவதால் மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
இதற்காக அனைவரும் மாலை 7 மணிக்குள் சாப்பிட்டே தீர வேண்டும் என்பதில்லை. நீங்கள் தூங்குவதற்கு குறைந்தபட்சம் 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவை முடித்துவிட வேண்டும் என்பதே முக்கியமானது. உதாரணமாக, இரவு 11 மணிக்குத் தூங்குபவர்கள் 8 மணிக்கெல்லாம் சாப்பிட்டு விடுவது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் தாமதமாகச் சாப்பிட நேர்ந்தால், காய்கறிகள் போன்ற லேசான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
இரவு உணவுக்குப் பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் மெதுவாக நடப்பது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். சாப்பிட்ட உடனேயே படுக்கைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உணவின் அளவு, சரியான நேரப் பராமரிப்பு மற்றும் ஒழுங்கான தூக்கம் ஆகிய மூன்றையும் பின்பற்றுவது நீண்டகால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
