தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பிற உயிரைக் காப்பாற்றப் போராடிய ரயில்வே கேட் கீப்பர், ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​பாபநாசம் அருகே உள்ள கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென தண்டவாளத்தில் நின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைக் கவனித்த அங்கிருந்த ரயில்வே கேட் கீப்பரான ராகுல், உடனடியாகச் சாதுரியமாகச் செயல்பட்டு அந்த நபரின் உயிரைக் காப்பாற்ற ஓடிச் சென்றுள்ளார்.

​அப்போது எதிர்பாராதவிதமாக அதிவேகமாக வந்த ரயில், தண்டவாளத்தில் இருந்த நபர் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்ற கேட் கீப்பர் ராகுல் ஆகிய இருவர் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் துரதிர்ஷ்டவசமாக இருவருமே தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

​உயிரிழந்த கேட் கீப்பர் ராகுல் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்குத் திருமணமாகி வெறும் 6 மாதங்களே ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. புதுமணத் தம்பதியின் வாழ்க்கை தொடங்குவதற்குள்ளேயே பிற உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் ராகுல் உயிரை விட்ட சம்பவம், அப்பகுதி மக்களையும் ரயில்வே ஊழியர்களையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.