மத்தியப் பிரதேச மாநிலத்தில், பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை, குடும்பத்திற்கு அறிமுகமான நபர் ஒருவர் அண்ணன் கண் முன்னே கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்காம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி, ஆறாம் வகுப்பு படிக்கும் தனது 11 வயது அண்ணனுடன் பள்ளி முடிந்து நடந்து வந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

அப்போது அங்கு வந்த 21 வயதான அந்த நபர், இருவரையும் தனது பைக்கில் வீட்டில் கொண்டு போய் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். குடும்பத்திற்குத் தெரிந்தவர் என்பதால் சிறுவர்களும் பைக் ஏறியுள்ளனர். ஆனால் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், ஒதுக்குப்புறமான ஒரு பாழடைந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதைப் பார்த்துத் தங்கைக்காகப் போராடிய 11 வயது அண்ணனையும் அந்த நபர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். பின்னர் சிறுமியை மயக்க நிலையில் அங்கேயே போட்டுவிட்டு குற்றவாளி தப்பி ஓடியுள்ளார். சிறுவன் ஓடிச் சென்று குடும்பத்தினரிடம் விஷயத்தைக் கூற, உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குப் பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மெஹ்கான் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தனிப்படை அமைத்த காவல்துறை 24 மணி நேரத்திற்குள் அதே கிராமத்தைச் சேர்ந்த குற்றவாளியைக் கைது செய்தது. இதற்கு சில நாட்களுக்கு முன்புதான் நர்சிங்பூர் பகுதியில், மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவரைப் பக்கத்து வீட்டுக்காரர் காட்டுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நாடு முழுவதும் பெற்றோர் இடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து திரும்பும் குழந்தைகளுக்குத் தெரிந்த நபர்களாகவே இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.