தற்போது அழகுசாதனப் பராமரிப்பில் ‘ஃபேஸ் யோகா’ மிகப்பெரிய அளவில் கவனத்தைப் பெற்று வருகிறது. அறுவை சிகிச்சைகளோ அல்லது ரசாயனப் பொருட்களோ இல்லாமல், நமது முகத்தில் உள்ள 43 தசைகளுக்கான பயிற்சிகளை அளித்து முக பொலிவை மீட்டெடுப்பதே இந்த ஃபேஸ் யோகாவின் முக்கிய நோக்கமாகும். தினமும் 5 முதல் 15 நிமிடங்கள் வரை இந்த எளிய பயிற்சிகளைச் செய்து வந்தால், முகத்தின் ரத்த ஓட்டம் அதிகரித்துச் சருமம் பளபளப்பாக மாறும்.
வழக்கமான உடற்பயிற்சிகளைப் போலவே, ஃபேஸ் யோகா செய்வதும் முகத்தின் தசைகளை வலுப்படுத்தி சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது. இது முகத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், கன்னங்கள் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள சுருக்கங்களைப் போக்கவும் உதவுகிறது. மேலும், சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு காரணமான ‘கொலாஜன்’ உற்பத்தியைத் தூண்டி, முகத்தைச் சமச்சீராகவும் இளமையாகவும் வைத்திருக்க வழிவகுக்கிறது.
தாடைப் பகுதியை அழகாக மாற்ற விரும்புபவர்கள் ‘ஜாவ் லைன் ஸ்கல்ப்டர்’ பயிற்சியைச் செய்யலாம். ஆள்காட்டி மற்றும் நடுவிரல்களைக் கன்னத்தின் நடுவில் வைத்து, தாடை எலும்பு வழியாகக் காதுகளை நோக்கி மேல்நோக்கிச் சிறிது அழுத்தத்துடன் தேய்க்க வேண்டும். அதேபோல, தொளதொளப்பான கழுத்துப் பகுதியை இறுக்கமாக்க நெக் டைட்டனர் பயிற்சியையும், இரட்டைத் தாடையைக் குறைத்துக் கன்னங்களை உயர்த்த ‘சீக் லிஃப்டர்’ பயிற்சியையும் தினமும் 10 முறை செய்து வரலாம்.
முகத்தின் நடுப்பகுதியிலிருந்து வெளிப்புறமாக விரல் நுனிகளால் மசாஜ் செய்வதன் மூலம் நிணநீர் ஓட்டத்தைத் தூண்டி, நச்சுக்களை வெளியேற்ற முடியும். நெற்றியில் தோன்றும் சுருக்கங்களைப் போக்க, விரல்களை நெற்றியில் வைத்துப் புருவங்களைப் பயன்படுத்தித் தோலை மெதுவாக வெளிப்புறமாக இழுக்கும் பயிற்சியைச் செய்யலாம். இந்த எளிய பயிற்சிகள் முகத்தின் முன் பகுதியிலுள்ள தசைகளைத் தளர்த்தி சுருக்கங்கள் உருவாவதைத் தடுக்கும்.
ஃபேஸ் யோகா செய்வதற்குத் தனியாகக் கட்டணமோ அல்லது பெரிய நேரமோ செலவிடத் தேவையில்லை. தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கித் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தாலே, இயற்கையான முறையில் பொலிவான மற்றும் இளமையான முகத்தைப் பெற முடியும். செயற்கை முறைகளைத் தவிர்த்து, இந்த எளிய ஆரோக்கியமான பழக்கத்தைக் கையாள்வதே நீண்டகால அழகிற்குச் சிறந்த வழியாகும்.
