வீடு பார்க்கச் சென்ற தம்பதியினர் மீது ஆபத்தான வளர்ப்பு நாய் ஒன்று திடீரெனப் பாய்ந்து கடித்துக் குதறிய கோரச் சம்பவம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டியாலா நகரின் புகழ்பெற்ற குமான் நகர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனியார் வங்கி மேலாளராகப் பணிபுரியும் அங்கித் சபர்வால் மற்றும் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் அவரது மனைவி ஷிபாலி சபர்வால் ஆகியோர், புதிய வீடு வாங்குவது தொடர்பாகப் பார்க்கச் சென்றுள்ளனர். அவர்களுடன் சொத்து முகவரும் உடனிருந்துள்ளார்.

குறிப்பிட்ட வீட்டின் வாசலுக்குச் சென்ற தம்பதியினர், வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியுள்ளனர். அடுத்த கணமே, அந்த வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த ஆபத்தான ‘பிட்புல்’ வகை நாய் ஒன்று திடீரென வெளியே பாய்ந்து வந்து அவர்களைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது.

திடீர் தாக்குதலால் உறைந்துபோன தம்பதியினர் தங்களை மீட்க முயன்றனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்களும் உடனடியாக ஓடிவந்து நாயை விரட்ட முயன்றனர். அதற்குள் அந்த வெறிபிடித்த நாய், கணவன்-மனைவி இருவரின் உடல் பல பாகங்களிலும் பலத்த காயங்களை ஏற்படுத்தும் வகையில் கடித்துக் குதறியது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த காயமடைந்த தம்பதியை உடனடியாக மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாகத் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்துத் துணை காவல் கண்காணிப்பாளர் ஜங்ஜித் ரந்தாவா கூறுகையில், பாதிக்கப்பட்ட ஷிபாலியின் மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வளர்ப்புப் பிராணிகள் மூலம் பொதுமக்களுக்குக் காயத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ஆபத்தான நாய் வகைகளைப் பாதுகாத்து வரும் உரிமையாளர்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்ற வழிகளைக் கண்டறிந்து சரிபார்க்க விரைவில் சிறப்புப் பிரசாரங்கள் தொடங்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு சிறுவன் மீது பிட்புல் நாய் தாக்குதல் நடத்திய வழக்கில் உரிமையாளர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது பஞ்சாப்பிலும் இந்தச் சம்பவம் மீண்டும் நாய்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.