திருவாரூரில் பணியிலிருந்த தலைமைக்காவலரைத் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் நீதிமன்ற வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நாயொன்று இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வழியே வந்த ராஜேஷ், அங்கிருந்த தலைமைக்காவலரிடம் இறந்து கிடந்த நாயை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்து நகர்ந்து சென்ற தலைமைக்காவலரை ராஜேஷ் பின்தொடர்ந்து சென்று, அவருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுத் தாக்கியதாகப் புகார் கூறப்படுகிறது. இச்சம்பவம் நீதிமன்ற வளாகப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட தலைமைக்காவலர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தவெக நிர்வாகியான ராஜேஷைக் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
