சமீபத்தில் நடிகை வைஷாலி, முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக மின் கட்டண விவகாரத்தில் கருத்துத் தெரிவித்ததற்காக மன்னிப்பு கோரியிருந்தார். அத்துடன், கடந்த இரண்டு மூன்று மாதங்களாகப் பலருக்கும் மின் கட்டணம் அதிகமாக வருவதாகவும், தனக்கும் தற்போது வழக்கத்தை விட மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாகக் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

​நடிகை வைஷாலியின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. இந்த புகாரை உடனடியாக விசாரிப்பதற்காக மின்வாரிய குழுவினர் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், மின் இணைப்பு எண் மற்றும் முகவரியைக் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​ஆனால், தகவல்களை உடனடியாகத் தருவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்த அவர், அதன் பின்னர் மின் இணைப்பு எண்ணையோ முகவரியையோ வழங்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மின்வாரியம் சார்பில் பலமுறை அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றும், களத்தில் நேரில் சென்று ஆய்வு செய்யப் பொறியாளர்கள் குழு தயாராக உள்ளதாகவும் மின்சார வாரியம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

​சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான விவரங்களை வழங்கினால், மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு உரிய தீர்வு காணப்படும் எனத் தெரிவித்துள்ள மின்வாரியம், உண்மை நிலவரம் அறியாமல் தேவையற்ற வதந்திகளையோ தவறான தகவல்களையோ பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்குக் கேட்டுக்கொண்டுள்ளது.