அர்ஜென்டினா நாட்டில் உள்ள சான்லொரென்சினா கால்பந்து லீக் போட்டியில் நடுவருக்கு எதிராக நடந்த ஒரு பகீர் தாக்குதல் சம்பவம் விளையாட்டு உலகை அதிர வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் போது,  35 வயதுடைய வீரர் ஒருவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி மைதானத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வீரர், நடுவரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென நிலைமையை மீறி ஆக்ரோஷமடைந்த அந்த வீரர், நடுவரின் முகத்திலேயே பலமாக ஓங்கி குத்தினார். அந்த அடியின் பலத்தால் நிலைதடுமாறிய நடுவர் சுருண்டு மைதானத்திலேயே கீழே விழுந்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களையும், வீரர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த ஒட்டுமொத்த அதிர்ச்சி சம்பவமும் கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது.

இந்தத் தாக்குதலில் நடுவரின் வலது கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகளும் சிகிச்சையும் அளிக்கப்பட்டன. இதற்கிடையில், மைதானத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீரரை அங்கேயே கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

உள்ளூர் போட்டிகள் மற்றும் லீக் போட்டிகளில் நடுவர்களின் பாதுகாப்பு எந்தளவிற்கு கேள்விக்குறியாகியுள்ளது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. விளையாட்டு வீரர்களின் இந்த அடாவடித்தனமான செயலிற்கு இணையத்தில் கண்டனங்கள் குவிந்து வருவதுடன், நடுவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன.