பெங்களூரில் நள்ளிரவு நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவுவாயில் கேட்டை கார் ஒன்று வேகமாக வந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அதிகாலை சுமார் 1.42 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது குடியிருப்பின் நுழைவாயில் அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி, கார் வருவதைக் கண்டு உடனடியாக விலகியுள்ளார். இதனால் அவர் பெரும் ஆபத்தில் இருந்து நூலிழையில் தப்பியதாகத் தெரிகிறது.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அதில் வெள்ளை நிற கார் ஒன்று குடியிருப்பின் நுழைவுவாயில் கேட்டை நோக்கி வேகமாக வருவதும், தடுப்பை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வதும் பதிவாகியுள்ளது. கார் மோதிய அதிர்ச்சியில் காவலாளி உடனடியாக ஒரு பக்கமாகத் தாவுகிறார். இருப்பினும் மோதலின் தாக்கத்தால் அவர் கீழே விழுந்ததாகவும் காட்சிகளில் தெரிகிறது.
View this post on Instagram
கார் மோதிய பிறகு சில நொடிகள் கீழே இருந்த காவலாளி, பின்னர் எழுந்து நிற்பதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. சில நொடிகள் தாமதமாகவோ அல்லது அவர் விலகாமல் இருந்திருந்தாலோ நிலைமை மிகவும் மோசமாகியிருக்கக்கூடும் என்பதால், இந்தக் காட்சி பார்ப்பவர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பு எங்கு உள்ளது, சம்பவத்தில் தொடர்புடைய வாகனம் எது என்பது குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், காவலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
