தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று 3-வது நாளாக மிகவும் பரபரப்பாகவும், அனல் பறக்கும் விவாதங்களோடும் நடைபெற்றது. அவையின் நடவடிக்கைகளை மக்கள் நேரடியாக நேரலை மூலம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், சூலூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. சுகுமார் தனது பேச்சைத் தொடங்கினார்.
அவர் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் மனதில் இருந்திருந்தால் இன்று சட்டசபைக்குள் வந்திருப்பார் என்று ஒரு கருத்தை முன்வைத்தார். இந்த வார்த்தை அவையில் எதிரொலித்த உடனேயே அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
உடனே குறுக்கிட்டுப் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “தவெக எம்.எல்.ஏ. சுகுமார் கடந்த ஆட்சியில் எங்கள் கட்சியின் மூத்த அமைச்சரான ஐ. பெரியசாமியுடன் சுற்றிக் கொண்டிருந்தவர். மேலும், தமிழ்நாட்டின் 1.31 கோடி பெண்களின் மனதில் மு.க.ஸ்டாலின் மிக ஆழமாகக் குடியிருக்கிறார்” என்று பதிலடி கொடுத்தார்.
இதற்கிடையில், விவாதத்தின் போது நேரலை ஒளிபரப்பு குறித்து திமுக கொறடா எ.வ.வேலு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்தார். “சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் நிலையில், கண்ணியத்திற்கு எதிரான வார்த்தைகள் பேசப்பட்டால் அவை பின்னர் சபாநாயகரின் ஆய்வுக்குப் பின் நீக்கப்படுகின்றன. ஆனால், இப்போது எல்லாமே நேரலை ஆவதால், சர்ச்சைக்குரிய வார்த்தைகளை சபாநாயகர் அப்போதே உடனுக்குடன் நீக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அவையின் மாண்பைக் காக்கும் வகையில், தவெக எம்.எல்.ஏ. சுகுமாரை நோக்கிப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “பேசும்போது எவ்விதமான சர்ச்சைக் கருத்துகளையும் தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒரு பெரிய திராவிட பின்புலம் கொண்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள்; எனவே, அந்தப் பாரம்பரியத்தின் கண்ணியத்தையும் கவுரவத்தையும் எப்போதும்கீழே இறக்காமல் காப்பாற்றும் வகையில் தொடர்ந்து பேச வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.
