இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பயிற்சி அமர்வுக்குப் பிறகு பேருந்தில் ஏறும் போது மீண்டும் தனது ‘புஷ்பா’ ஸ்டைல் சைகையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வரும் பயிற்சி அமர்வுகளை முடித்துவிட்டு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த திங்கட்கிழமை மைதானத்தில் இருந்து திரும்பினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், பயிற்சி அமர்வை முடித்துவிட்டு சக வீரர்களுடன் ஜடேஜா வெளியே வரும் போது, கேமராவில் தன்னை  படம் பிடிப்பதை கவனித்துள்ளார். உடனே நடிகர் அல்லு அர்ஜுனின் புகழ்பெற்ற ‘புஷ்பா’ படத்தின்  ஸ்டைலில் போஸ் கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறியுள்ளார். ஜடேஜாவின் இந்த ஜாலியான மற்றும் சுவாரசியமான செய்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

இந்த ‘புஷ்பா’ ஸ்டைல் கொண்டாட்டம் ஜடேஜாவுக்குப் புதியதல்ல. கடந்த 2022-ல் இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் போது, விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஜடேஜா முதன்முதலில் இந்த பாணியைப் பயன்படுத்தினார். அதன் பிறகு கடந்த 2025 ஜூலை மாதம் சதம் அடித்த போதும் இதே புஷ்பா ஸ்டைலில் கொண்டாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தற்போது கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே, பயிற்சிக்குப் பிந்தைய பயணத்தின் போதும் அதே ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளதன் மூலம், ஜடேஜாவின் தனித்துவமான கொண்டாட்டங்களில் இந்த ‘புஷ்பா’ ஸ்டைல் இன்றும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.