இயற்கையில் வாழும் உயிரினங்களில் மிகவும் வியக்கத்தக்க தற்காப்புத் திறன் கொண்டது ‘பாம்பார்டியர் வண்டு’ ஆகும். அண்டார்டிகாவைத் தவிர உலகின் அனைத்துக் கண்டங்களிலும் வாழும் இந்த வண்டுகள், அளவில் சிறியவை. எதிரிகளிடமிருந்து ஆபத்து வரும்போது, அவை சிறிதும் அஞ்சாமல் தங்கள் வயிற்றின் பின்புறத்திலிருந்து கொதிக்கும் வீரியமிக்க இரசாயனத் திரவத்தை ஒரு குண்டு போல எதிரியின் மீது பீய்ச்சியடித்துத் தப்பிக்கின்றன.
இந்த வண்டுகளின் வயிற்றில் இரண்டு வெவ்வேறு உள் அறைகள் உள்ளன. ஒன்றில் ஹைட்ரோகுயினோன் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகிய வேதிப்பொருட்கள் திரவ வடிவில் சேமிக்கப்படுகின்றன. ஆபத்து காலத்தில் இந்த வேதிப்பொருட்களைச் சிறப்பு நொதிகள் உள்ள இரண்டாவது அறைக்கு வண்டு அனுப்புகிறது. அங்கு நிகழும் உடனடி வேதிவினையால், அந்தத் திரவம் சில மில்லி விநாடிகளுக்குள் 100 டிகிரி செல்சியஸ் கொதிநிலையை அடைகிறது.
வெப்பமும் வாயு அழுத்தமும் அதிகரிக்கும் போது, அந்தச் சூடான திரவம் எதிரிகள் மீது சக்திவாய்ந்த வெடிப்பாகப் பாய்கிறது. வண்டு இந்த திரவத்தை ஒரே அடியாக வெளியேற்றாமல், தொடர்ச்சியான சிறிய துடிப்புகளாகப் பீய்ச்சியடிக்கிறது. இதன் மூலம் தன் உடலுக்குள் இருக்கும் அறையைக் குளிர்வித்து, வெப்பத்தால் தன் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்கிறது.
மேலும், இந்த வண்டால் தனது வேதிக்குண்டு வீசும் உறுப்பை 270 டிகிரி கோணத்தில் சுழற்ற முடியும். இதனால் தனது உடலை திருப்பாமலேயே, எந்தத் திசையிலிருந்து தாக்கும் எதிரியின் கண்களையும் துல்லியமாகக் குறிவைத்துச் சுட முடிகிறது. இந்தத் திடீர் சூடான தாக்குதலால் எதிரி விலங்குகள் நிலைதடுமாறி ஓடிவிடுகின்றன.
இந்த வண்டின் உச்சகட்ட அதிசயம் என்னவென்றால், தவளை போன்ற விலங்குகள் இதை முழுமையாக விழுங்கினாலும், அது தவளையின் வயிற்றுக்குள்ளேயே தன் இரசாயனக் குண்டை வெடிக்கச் செய்யும். வயிற்றுப் பொறுக்காத வெப்பத்தால் தவளை உடனடியாக அதை வாந்தி எடுத்துவிடும். இதன் மூலம் எந்தக் காயமுமின்றி வண்டு உயிருடன் வெளியே வந்துவிடும்.
