கிரிக்கெட் களத்தில் தன் இரும்புத் தோள்களாலும், மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைப் பறக்கவிடும் வெறித்தனமான பேட்டிங்காலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் மிச்செல் மார்ஷ். தற்போது இங்கிலாந்தில் நடந்துவரும் பிரபல ‘தி ஹண்ட்ரீட்’ தொடரில் எதிரணிகளை மிரட்டி வரும் இவர், தன் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் தொடாத ஒரு அரிய உச்சத்தைத் தொட்டுள்ளார்.

தற்போது நடைபெறும் போட்டிகளில் ரன் குவிப்பில் முதலிடத்தில் வலம்வரும் மச்செல் மார்ஷ், ஒரு காலண்டர் ஆண்டில் 1500 அல்லது அதற்கு மேற்பட்ட டி20 ரன்களைக் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, சக வீரர் டிம் டேவிட் 2022-ஆம் ஆண்டில் 68 இன்னிங்ஸ்களில் விளையாடி 27.67 சராசரியுடன் 1461 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஆனால், அந்தச் சாதனையை மிக எளிதாகத் தகர்த்தெறிந்துள்ளார் மார்ஷ்.

இந்தச் சாதனையை நிகழ்த்த மார்ஷ் எடுத்துக் கொண்ட கணக்கீடுதான் கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 35 போட்டிகளில் மட்டுமே களம் கண்ட அவர், 44.17 சராசரியுடன் 1502 ரன்களை வாரிக் குவித்துள்ளார். இவரது மிரட்டலான ஸ்டிரைக் ரேட் தோராயமாக 160 என்ற அளவில் உள்ளது. இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 2 சதம் மற்றும் 11 அரைசதங்களை விளாசித் தள்ளியுள்ளார்.

இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகள், பிக்பேஷ் லீக்கில் பர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி மற்றும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடி இந்த பிரம்மாண்ட ரன்வேட்டையை நிகழ்த்தியுள்ளார் மார்ஷ்.