இஸ்ரேல்–ஹமாஸ் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து காசாவில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காசா விவகாரத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
காசாவில் போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக டிரம்பின் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், பாலஸ்தீனத்துக்கு தனி நாடு உருவாக்கும் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடுமையா நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். நான் பிரதமராக இருக்கும் வரை பாலஸ்தீன அரசு உருவாகாதுஎன அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, டிரம்பின் திட்டம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பும் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. காசாவில் போர் நிறுத்தம், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை ஹமாஸ் தரப்பு வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருபுறம் இஸ்ரேல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையில், மறுபுறம் ஹமாஸ் தரப்பும் நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இதனால் டிரம்பின் காசா அமைதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் நீடித்து வரும் இந்த மோதலுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் முயற்சிகள் எந்த திசையில் செல்லும் என்பது சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
