முருங்கை மரமும் கறவை மாடும் இருந்தால் ஒரு குடும்பமே பிழைத்துக் கொள்ளும்’ என்பது பழமொழி. முருங்கை மரமானது மனிதனுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களைத் தரும் அற்புத மரமாகும். இருப்பினும், முருங்கை மரத்தில் பேய், பிசாசு குடியிருக்கும் என்ற மூடநம்பிக்கையால் சிலர் அதை வீட்டில் வளர்க்க அச்சப்படுகிறார்கள்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வேதாளம் முருங்கை மரத்தில் முருங்கை மரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்வது போலக் கூறப்பட்ட கதைகளே, காலப்போக்கில் இத்தகைய பயத்திற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது. உண்மையில் எந்த மரத்திலும் பேய் குடியிருப்பதில்லை; அறிவியல் ரீதியாகப் பேய் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதே உண்மையாகும்.

இருப்பினும், முருங்கை மரத்தை வீட்டின் ஜன்னல் அல்லது வாசலுக்கு மிக அருகில் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் கம்பளிப் பூச்சிகள் மற்றும் பிற பூச்சிகள் அதிகமாகப் பெருக வாய்ப்புள்ளது. எனவே, வீட்டிற்குச் சற்று தள்ளியோ அல்லது வீட்டின் வேலியோரத்திலோ முருங்கை மரத்தை நட்டு தாராளமாக வளர்க்கலாம்.

அதேபோல, வேப்ப மரத்தை வீட்டில் வளர்ப்பது குறித்துச் சிலருக்கு சந்தேகங்கள் உள்ளன. வேப்ப மரம் சுற்றியுள்ள காற்றைச் சுத்திகரிப்பதுடன், நோய்க்கிருமிகளை அழிக்கும் சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் மிகுந்த நன்மைகளைத் தரும் வேப்ப மரத்தையும் எந்தத் தயக்கமும் இன்றி வீடுகளில் வளர்க்கலாம்.

மூடநம்பிக்கைகளை நம்பிப் பயப்படாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் சத்தையும் தரும் முருங்கை மரம் மற்றும் வேப்ப மரத்தை வீடுகளில் வளர்ப்பதே நல்லது. இது குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் பெரிதும் துணைபுரியும்.