ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கணக்காளரான ஆண்டி எவன்ஸ் என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்ததன் மூலம் தனது வாழ்க்கையும் தொழிலும் முற்றிலும் மாறியதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் மேஜை நாற்காலி வேலையில் இருந்த அவர், தற்போது இந்தியாவில் முழுநேர சமூக ஊடகக் உள்ளடக்கப் படைப்பாளராக உருவெடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ‘theaussiebhai’ என்று அழைக்கப்படும் ஆண்டி எவன்ஸ், தனது இந்தியப் பயணம் குறித்து ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில், “நான் எடுத்த முடிவுகளிலேயே மிகச் சிறந்தது இந்தியாவிற்கு வந்ததுதான். 8 வருடங்களாகக் கணக்காளராக இருந்த நான், இங்கு வந்து கற்பனை செய்து பார்க்க முடியாத பல சாதனைகளைச் செய்துள்ளேன்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகள் மூலம் நாடு முழுதும் பயணம் செய்து, புதிய மனிதர்களைச் சந்தித்து, அழகான தருணங்களை உலகிற்குப் பகிர்ந்து வருவதாக அவர் கூறினார். இந்த அழகான மற்றும் பரபரப்பான இந்தியாவிற்குத் தான் என்றென்றும் கடமைப்பட்டிருப்பதாகவும், இனிவரும் காலங்களில் பல புதிய அனுபவங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டி எவன்ஸ் பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பல இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “இந்தியாவும் உங்களை நேசிக்கிறது ஆசி பாய்”, “நீங்கள் இங்கேயே மகிழ்ச்சியைக் கண்டடைந்தது மகிழ்ச்சி”, “இந்தியாவிற்கு எப்போதும் உங்களுக்கு வரவேற்பு உண்டு” எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
“>
ஒரு வெளிநாட்டவர் இந்தியாவின் மீது காட்டும் இந்த அன்பும், தன் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்துக் கொண்டவிதமும் இணையத்தில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்திய கலாச்சாரத்தையும் மக்களின் அன்பையும் பாராட்டி அவர் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
