மத்தியப் பிரதேச மாநிலம் கண்ட்வா பகுதியில் உள்ள ‘பிஸ்மில்லா ஹோட்டல்’ என்ற கடையில், இர்பான் கான் என்பவர் தனது குடும்பத்திற்காக மட்டன் குழம்பு பார்சல் வாங்கிச் சென்றார். வீடு திரும்பியதும் அனைவரும் சாப்பிட உட்கார்ந்தனர். அதற்குள் வீட்டில் இருந்த இரண்டு சிறிய குழந்தைகள் ஆசையாக அந்த மட்டனில் இருந்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து மீதமுள்ள குழம்பைக் கவனமாகப் பார்த்தபோது, மட்டன் துண்டுகளுக்கு நடுவில்  செத்த நிலையில் ஒரு எலி மிதந்துகொண்டிருப்பதைப் பார்த்து ஒட்டுமொத்த குடும்பமும் அலறி அடித்து உறைந்துபோனது.

குழந்தைகள் ஏற்கனவே அந்த உணவைச் சாப்பிட்டுவிட்டதால் பதறிப்போன பெற்றோர், பயந்துபோனதுடன் உடனடியாகக் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். நல்லவேளையாகப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்ததும் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஆனாலும், ஓட்டல் நிர்வாகத்தின் இந்த மோசமான செயலால் கோபமடைந்த இர்பான் கான், அந்த எலி மிதக்கும் காட்சியைத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட, அது பார்ப்பவர்களை எல்லாம் வாந்தி எடுக்க வைக்கும் அளவுக்கு வேகமாகப் பரவியது.

இந்த விவகாரம் குறித்து உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு முறையான புகார் அளிக்கப்பட்டது. உடனே களத்தில் இறங்கிய அதிகாரிகள் அந்த ஹோட்டலுக்கு நேரில் சென்று அதிரடிச் சோதனையை நடத்தி, அங்கு சமையலறையில் இருந்த மட்டன் மற்றும் பிரியாணி மாதிரிகளைப் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்து தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.