மத்திய அரசின் வரவிருக்கும் தொகுதி மறுவரையறை மசோதா விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புதிய அனலைக் கிளப்பியுள்ளது. மக்களவைத் தொகுதிகளை மாற்றி அமைக்கும் இந்தத் திட்டத்தில் சில குறிப்பிட்ட பாதுகாப்பு நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், திமுக தனது கடுமையான எதிர்ப்பைக் தளர்த்திக்கொள்ள வாய்ப்புள்ளதாக வெளியான ஊடகத் தகவல்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, தவெக முதல்வர் விஜய் தமிழக எம்பிக்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதும் இந்தச் சந்தேகங்களுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

இந்தச் செய்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ள திமுக மூத்த தலைவர் உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தொடக்கத்திலிருந்தும் இந்தத் திட்டத்தை எதிர்த்து வரும் திமுக, இப்போதும் தொடர்ந்து எதிர்க்கும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதுவொன்றும் புதிதாக உருவான விவாதம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீட் பகிர்வுக்கான அடிப்படையாக 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொடர்வது, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான முறையில் மக்களவைத் தொகுதிகளை விரிவுபடுத்துவது மற்றும் தொகுதி வாரியான பங்கீட்டைச் சட்டத்திலேயே வெளிப்படையாக வெளியிடுவது போன்ற நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் மசோதாவை ஆதரிக்கலாம் என்று வெளியான தகவல்களே இந்த விவாதத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவுடன் சேர்த்து இந்தத் தொகுதி மறுவரையறை மசோதாவையும் மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இதற்கு முன்பு எதிர்க்காட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் இந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது மீண்டும் இச்சட்டம் புத்துயிர் பெறவுள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், அது தென் மாநிலங்களின் ஒட்டுமொத்த நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்ற அச்சம் தமிழகத்தில் நிலவுகிறது.

“>

 

இந்தச் சூழலில், அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்கொள்ளத் தமிழகத் தலைவர்கள் தீவிரம் காட்டி வருவது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.