விளையாடித் திரியும் வயதில் உலகளாவிய வர்த்தக நிறுவனங்களைத் தன் தொழில்நுட்பத்தால் மிரள வைத்துள்ளார் 12 வயது சிறுமியான மானா ஜம்பாலம். கேடா, இந்தியா, கம்மோடியோ போன்ற பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்குத் தேவையான அதிநவீன செயற்கை நுண்ணறிவு சேவைகளை ‘வோக்சா’  என்ற தனது சொந்த ஸ்டார்ட்அப் மூலம் வழங்கி தொழில்நுட்ப உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். சிறுவயதிலேயே கணினி மொழிகளைக் கற்றுத் தேர்ந்த இவர், இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளார்.

தன் தந்தையின் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகளை எடுக்க முடியாமல் திணறுவதைக் கவனித்த இந்தச் சிறுமி, அந்தப் பிரச்சினைக்குத் தொழில்நுட்ப ரீதியான தீர்வைத் காணத் திட்டமிட்டார். இதன் விளைவாக உருவாக்கப்பட்டதே ‘வோக்சா’ என்ற ஏஐ ரிசப்ஷனிஸ்ட் ஆகும்.

இது 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை ஏற்று பேசுவதுடன், அப்பாயிண்ட்மெண்ட்களைப் பதிவு செய்தல் மற்றும் உணவு ஆர்டர்களைக் கையாளுதல் போன்ற பல்வேறு பணிகளைத் தடையின்றிச் செய்து வணிக நிறுவனங்களுக்குப் பேருதவியாக விளங்கி வருகிறது.

எந்தவொரு பெரிய பின்புலமும் இல்லாமல், சாட்ஜிபிடி மற்றும் கிளாட் போன்ற நவீன கருவிகளின் உதவியுடன் தானே சிறு சிறு கோடுகளை எழுதி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். கோடிங் அறிவு பெரிதும் தேவையில்லாமல் எளிய ஆங்கிலத்திலேயே தன்னாட்சி பெற்ற ஏஐ ஏஜென்ட்டுகளை உருவாக்கும் புதிய வசதியையும் இவர் தற்போது வடிவமைத்து வருகிறார். கடின உழைப்பும் எதையும் சாதிக்கும் வெறியும் இருந்தால் எந்த வயதிலும் சாதனை படைக்கலாம் என்பதை மானாவின் இந்த வியக்கத்தக்க வெற்றி நிரூபித்துக் காட்டியுள்ளது.