மலை கிராமம் ஒன்றில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, போதிய ஆட்டக்காரர்கள் இல்லாததால் ஒரு விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான வழியைக் கையாளும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. எளிய முறையில் பொழுதுபோக்க நினைத்த அந்தச் சிறுவர்கள், தங்களது வீட்டில் வளர்க்கப்படும் பசுக்களையும் நாய்களையும் மிகச் சிறப்பாகப் பயிற்சிவித்து அவற்றைத் தங்களது கிரிக்கெட் அணியின் ஃபீல்டர்களாகப் பயன்படுத்தியுள்ளனர். எக்ஸ் தளத்தில் முஃபதால் வோரா என்பவரால் பகிரப்பட்ட இந்த மனதை உருக்கும் வீடியோ, வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளைக் குவித்து இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

அந்த வைரல் காட்சியில், மலைப்பாங்கான அந்தப் பகுதியில் சிறுவர்கள் பேட்டிங் செய்ய, சில மாடுகளும் நாய்களும் மைதானத்தில் எந்தவித சலசலப்புமின்றி ஃபீல்டிங் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு நிற்கின்றன. குறிப்பாக, ஒரு நாய் எந்தவித கையுறைகளும் இல்லாமல் விக்கெட் கீப்பராக ஸ்டம்புக்கு பின்னால் நின்று பந்தைக் கைகளால் அல்லது வாயால் லாவகமாகப் பிடிப்பதைப் பார்த்து நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர். அதுமட்டுமின்றி, பேட்ஸ்மேன் அடித்த பந்தை ஒரு நாய் மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று பாய்ந்து பிடித்து அவுட் ஆக்குவதோடு, மலைப்பாறைகளின் மீது தாவிக்குதித்துச் சென்று பந்தைத் தேடிப் பிடித்து பவுலரிடம் கொண்டு வந்து தரும் அசாத்தியத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளது.

நாய்களின் இந்த அரிய ஃபீல்டிங் திறமையையும், விக்கெட் கீப்பிங் வித்தைகளையும் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த சிறுவன் அப்படியே சிலிர்த்துப் போய் நிற்பது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. முறையான கிரிக்கெட் மைதான வசதிகள் இல்லாத கிராமத்துச் சூழலில், தங்களிடம் உள்ள வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டே கிரிக்கெட் ஆட்டத்தை அவர்கள் சுவாரஸ்யமாக மாற்றியமைத்த விதம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள அன்பையும் புத்தி கூர்மையையும் வெளிப்படுத்தும் இந்த அழகான மற்றும் கியூட்டான கிரிக்கெட் வீடியோ சமூக வலைதளவாசிகள் மத்தியில் தற்போது ஹாட் டாபிக்காக மாறி சிரிப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.