சுமார் 4,700 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்ட லக்னோ – கான்பூர் நெடுஞ்சாலை திறக்கப்பட்ட வெறும் 24 நாட்களுக்குள்ளேயே ஆங்காங்கே படுமோசமாகச் சேதமடைந்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் மற்றும் முதல்வர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட இந்த அதிவேகச் சாலையில், குறுகிய கால இடைவெளியிலேயே பல இடங்களில் திடீரென விரிசல்கள் ஏற்பட்டுச் சாலை தாழ்ந்துபோயுள்ளது.
View this post on Instagram
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் விபத்துகளைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உடனடியாக எச்சரித்து அந்தப் பகுதியில் டோல் கட்டண வசூலை ரத்து செய்துள்ளதுடன், ஐஐடி கரக்பூர் நிபுணர் குழுவைக் கொண்டு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், இந்தத் தரமற்ற பணிகளுக்குக் காரணமான நிறுவனத்தைக் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதோடு, சம்மந்தப்பட்ட திட்ட மேலாளர் மற்றும் இரண்டு பொறியாளர்களை அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்கும் அவசரப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஈரப்பதமான புதிய சீரமைப்புப் பகுதிகளை விரைவில் உலர்த்துவதற்காக ராட்சத மின்விசிறிகள் (Fans) பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது. இதனிடையே, ஆளும் அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சில வாரங்களிலேயே சாலைகளில் உயிர் பயத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளதுடன், இந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
