ஐதராபாத்தில் உள்ள குடிகாபூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பிரதான சாலையில் குடும்பத் தகராறு காரணமாக நடந்த ஒரு கொடூரச் செயல் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சல்மான் என்ற நபர், தான் பெற்றெடுத்த நான்கே வயதுடைய பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் தன் மகனைத் தீர்த்துக்கட்ட முயன்றுள்ளான்.

சாலையோரம் இருந்த இரும்புத் தூணில் சிறுவனின் தலையை ஓங்கி மோதியதோடுமட்டுமின்றி, அவனைத் தூக்கி நிலத்தில் பலமாக வீசிய அந்த நபர், அங்கிருந்த லாரி ஒன்றின் அடியில் தள்ளியும் கொல்லப் பார்த்துள்ளான். இதைக் கண்டும் பதறிப்போன அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு அந்த வெறிபிடித்த தந்தையை மடக்கிப் பிடித்துக் காப்பாற்றியதுடன், படுகாயமடைந்த சிறுவனை மீட்டு அவசரமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தச் சிறுவனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தகவலறிந்து வந்த காவல்துறையினர் கொடூரத் தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வர ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்தியதாகக் கூறி பொதுமக்கள் தங்களது ஆவேசத்தையும் கண்டனங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.