மழைக் காலத்தில் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லதா என்ற கேள்வி பலரின் மனதிலும் இருக்கும் ஒரு பெரிய சந்தேகமாகும். மழைக்காலத்தில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், மண்டையோட்டில்  வியர்வையும் பிசுபிசுப்பும் இயல்பாகவே அதிகரிக்கும்.

இந்தச் சூழலில் வழக்கம்போல அதிக அளவில் தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது, கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதித்து முடி உதிர்வை மேலும் அதிகப்படுத்தக்கூடும் என்று அழகு கலை மற்றும் சரும நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மழைக்கால ஈரப்பதத்தின் காரணமாகத் தலையில் எண்ணெய் தேய்க்கும்போது, அது தூசி மற்றும் அழுக்குகளைப் எளிதில் ஈர்த்துக் கொள்ளும். இதனால் மண்டையோட்டுப் பகுதியில் உள்ள துளைகள் அடைக்கப்பட்டு, பொடுகுத் தொல்லை, பூஞ்சை தொற்று மற்றும் அரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இருப்பினும், மழைக் காலத்தில் எண்ணெய்ப் பசையே பயன்படுத்தக் கூடாது என்பது அர்த்தமல்ல. தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்க, தலைமுடிக்குக் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக லேசாகச் சூடாக்கிய எண்ணெயைத் தடவி, பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு அலசுவது சிறந்த பலனைத் தரும்.

அதேபோல், எண்ணெயைத் தேய்த்துவிட்டு இரவு முழுவதும் அப்படியே ஊற வைப்பதையோ அல்லது பல நாட்கள் தலையில் எண்ணெயோடு இருப்பதையோ மழைக்காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். முடிக்கு ஏற்ற லேசான இயற்கைக் காய்கறி அல்லது மூலிகை எண்ணெய்களை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தி, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் லேசான மசாஜ் செய்து குளிப்பது கூந்தலை வலுவாக வைத்திருக்க உதவும்.