எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி அவர்கள் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் தவெக அரசின் திட்டமிட்ட அரசியல் சதி இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “நாளை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரின் குரலை முற்றிலும் முடக்குவதற்காகவே இந்த அவசரக் கைது நடவடிக்கை அரங்கேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் விவசாயிகள் சந்தித்து வரும் தீவிரப் பிரச்சனைகள் குறித்துச் சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் உரக்கப் பேசுவார் என்று கூறியிருந்த நிலையிலேயே, அவரைப் பேரவையில் பங்கேற்க விடாமல் தடுக்க இந்த கைது அரங்கேற்றப்பட்டுள்ளது” எனக் கடுமையாகச் சாடினார்.
மேலும் தவெக அரசின் போக்கை விமர்சித்த அவர், “தவெக அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும் அடக்குமுறைகளைக் கையாள்வதும் தொடர்கதையாக மாறிவிட்டது. இத்தகைய கண்டனத்திற்குரிய நடவடிக்கைகளின் மூலம் திமுகவின் போராட்டக் குணத்தை முடக்கிவிட முடியாது. உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டாலும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை திமுக சட்டமன்றத்தில் உறுதியாக உரக்கப் பேசும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
