உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஹர்தௌல்பூர் பகுதியில், இரண்டு நாட்களுக்கு முன்பு பாம்பு கொல்லப்பட்ட அதே அறையில் புகுந்த நச்சுப்பாம்பு கடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது 4 வயது தங்கை மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்தௌல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் குஷ்வாஹா. இவர் ஒரு தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நேகா. இவர்களுக்கு மயங்க் (7) என்ற மகனும், பிரகதி (4) என்ற மகளும் உள்ளனர்.
வழக்கம்போல் அன்றைய தினம் இரவு அனைவரும் ஒன்றாக உணவருந்திவிட்டு தாயார் நேகாவுடன் தூங்கச் சென்றுள்ளனர். அதிகாலை சுமார் 3.30 மணியளவில் பிரதீப் வேலைக்குச் சென்றுவிட்டார். மனைவியும் குழந்தைகளும் மட்டும் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அறைக்குள் நுழைந்த நச்சுப்பாம்பு ஒன்று தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
சிறிது நேரத்தில் சிறுமி பிரகதி வலியால் அலறித் துடித்துக் கதறினார். சத்தம் கேட்டு விழித்த தாய் நேகா, குழந்தையைத் தூக்க முயன்ற போது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த மயங்க் திடீரென அழுது துடித்தான். உடனே குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக விரைந்து வந்து இரு குழந்தைகளையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மயங்க் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் தாயார் நேகாவின் கதறல் மருத்துவமனையையே உலுக்கியது. படுகாயமடைந்த சிறுமி பிரகதிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து பேசிய சிறுவனின் தாத்தா ஹர்சரண் குஷ்வாஹா, “குழந்தைகளின் தந்தை வேலைக்குச் சென்ற சில நிமிடங்களில் பாம்பு அறைக்குள் நுழைந்துள்ளது. கடித்த பிறகு பாம்பு அங்கிருந்த சுவரிலுள்ள ஓட்டைக்குள் மறைந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் அது கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தினரும் பொதுமக்களும் பீதியில் உள்ளனர்” என்றார்.
இதற்கிடையே, அப்பகுதி கவுன்சிலர் சுஷில் குமார் குஷ்வாஹா கூறுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு இதே அறையில் ஒரு பாம்பு காணப்பட்டு கிராம மக்களால் அடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதே போன்றதொரு பாம்பு கடித்திருப்பது கிராம மக்களிடையே ‘பாம்பு ஜோடி’ குறித்த பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
உள்ளூர் மக்களின் தகவலின்படி, குழந்தைகளைக் கடித்தது இந்தியாவில் உள்ள மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகளில் ஒன்றான ‘கிரேட்’ வகையைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன் விஷம் நரம்பு மண்டலத்தை உடனடியாகப் பாதிக்கும் தன்மைகொண்டது. ஆரம்பத்தில் பெரிதாக வலியோ வீக்கமோ தெரியாது என்பதால் ஆபத்தை உணர்வது தாமதமாகிவிடும். எனவே, இத்தகைய பாம்பு கடித்தவுடன் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் சென்று உடனடி சிகிச்சை பெறுவது அவசியமாகும்.
