இன்றைய காலகட்டத்தில் வாகன இரைச்சல், கட்டிடச் சத்தம் மற்றும் குறட்டை போன்ற சத்தங்களால் பலருக்குத் தரமான தூக்கம் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனால் பலரும் ‘இயர்பிளக்’ (Earplug) அணிந்து தூங்கும் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். இயர்பிளக் வெளிப்புறச் சத்தத்தைக் குறைத்து ஆழ்ந்த உறக்கத்தைத் தருவதோடு, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. இருப்பினும், இதனைத் தினமும் தவறான முறையில் பயன்படுத்துவது சில காது ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இயர்பிளக்கை நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்தும்போது, காதுக்குள் இருக்கும் மெழுகு இயல்பாக வெளியேற முடியாமல் மேலும் உள்ளே தள்ளப்பட்டு அடைப்பு ஏற்படலாம். இதனால் காதில் வலி, கனமான உணர்வு மற்றும் தற்காலிகமாகக் கேட்கும் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் உருவாகக்கூடும். அதேபோல், இயர்பிளக்குகளைச் சரியாகப் பராமரிக்காமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், அதில் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று ஏற்பட்டு காதில் அரிப்பு, வீக்கம் மற்றும் திரவம் வடிதல் போன்ற கடுமையான அலர்ஜிகள் உருவாக வாய்ப்புள்ளது.
சந்தையில் ஃப்போம் சிலிக்கான்மற்றும் மெழுகு என பல வகையான இயர்பிளக்குகள் கிடைக்கின்றன. இதில் ஃப்போம் வகையைச் சேர்ந்தவற்றை ஒருசில முறைகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஏற்கனவே காது தொற்று, அறுவை சிகிச்சை அல்லது காதுத்திரையில் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி இதைப் பயன்படுத்தக் கூடாது. இயர்பிளக் பயன்படுத்துபவர்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவிய பிறகே அதைக் காதில் வைக்க வேண்டும்; மேலும் காதின் மிக ஆழத்திற்குத் தள்ளாமல் கவனமாகக் கையாள வேண்டும்.
தூக்கப் பிரச்சினைக்கு இயர்பிளக்கை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கக் கூடாது என்பதே நிபுணர்களின் கருத்தாகும். இரவில் மொபைல் போன் பயன்பாட்டைக் குறைப்பது, சீரான நேரத்தில் தூங்கச் செல்வது, அறையை அமைதியாகவும் இருட்டாகவும் வைத்துக்கொள்வது மற்றும் மாலையில் காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்ப்பது போன்ற எளிய பழக்கவழக்கங்கள் இயற்கையாகவே நல்ல தூக்கத்தைத் தரும். தூக்கமும் காது ஆரோக்கியமும் இரண்டுமே முக்கியம் என்பதால், இயர்பிளக்குகளைத் தேவையான நேரத்தில் சரியான சுகாதாரத்துடன் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
