இன்று மனிதர்களின் கைகளில் கட்டப்படும் கடிகாரங்கள் வெறும் நேரத்தைக் காட்டும் கருவி மட்டுமல்ல; அது அவர்களின் அந்தஸ்தையும் கம்பீரத்தையும் பறைசாற்றும் ஒரு அடையாளமாக மாறிவிட்டது. உலகளவில் புகழ்பெற்ற பல வாட்ச் பிராண்டுகள் இருந்தாலும், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த ஒரு பெயர் ‘டைட்டன்’ ஆகும். உலகின் 5-வது மிகப்பெரிய கடிகார நிறுவனமாக வளர்ந்துள்ள இந்த பிரம்மாண்டப் பெயர் உருவாவதற்கு நமது தமிழ்நாடுதான் முதன்மை அடித்தளமாக அமைந்தது.

1970 மற்றும் 80-களில் இந்திய கடிகார சந்தையில் ‘ஹெச்.எம்.டி’ நிறுவனம் மட்டுமே அசைக்க முடியாத ராஜாவாகத் திகழ்ந்தது. ஒரு சாதாரண கடிகாரத்தை வாங்குவதற்குக்கூட மக்கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த ஏகபோக நிலையை உடைத்து, இந்தியர்களுக்கு அதிநவீன ‘குவார்ட்ஸ்’ தொழில்நுட்பத்தில் உலகத்தரம் வாய்ந்த கடிகாரங்களை வழங்க டாடா குழுமத்தைச் சேர்ந்த ஜெர்க்ஸஸ் தேசாய் திட்டமிட்டார்.

டாடாவின் இந்த பிரம்மாண்ட திட்டத்திற்குப் பல மாநிலங்கள் தயக்கம் காட்டிய நிலையில், தமிழக அரசு தனது தொலைநோக்கு பார்வையுடன் ஆதரவு அளிக்க முன்வந்தது. அதன்படி, 1984-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி டாடா குழுமமும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான ‘டிட்கோ’ அமைப்பும் இணைந்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் எல்லைப் பகுதியான ஓசூரில் இதற்கான பிரம்மாண்ட தொழிற்சாலை அமைக்கப்பட்டது. பின்னர் 1988-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ஜே.ஆர்.டி. டாடா அவர்களால் இந்தத் தொழிற்சாலை முறைப்படி திறந்து வைக்கப்பட்டு, உலகளவில் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் புதிய சரித்திரம் தொடங்கியது.