இந்தியாவில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டி வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். 2021-22ஆம் ஆண்டில் 142 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2025-26ஆம் ஆண்டில் 576 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, வெறும் 5 ஆண்டுகளில் 100 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 300 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
தொழில் துறை, தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே அதிக வருமானம் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை உயர முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், நாட்டில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை அல்லது அவர்களின் சொத்து மதிப்பு குறித்தான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை என்றும், வருமான வரிச் சட்டத்தில் ‘பில்லியனர்’ என்ற தனி வரையறை எதுவும் இல்லை என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
வருமான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கூறினார். அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு கூடுதல் வரி விதிப்பது, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணவு, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரூ.100 கோடிக்கும் மேல் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது இந்தியப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியைக் காட்டினாலும், வருமான சமநிலையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் அவசியத்தையும் உணர்த்துவதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
