உலகெங்கிலும் உள்ள சுற்றுலாத் தலங்களில் மலிவான விலையில் அசல் மற்றும் உள்ளூர் பாரம்பரிய உணவுகளை வழங்கும் தெருவோர உணவுப் பண்பாடு கடந்த சில ஆண்டுகளாகப் பாரிய பிரபலமடைந்து வருகிறது. உலகளவில் சுமார் 2.5 பில்லியன் மக்கள் ஆண்டுதோறும் இதுபோன்ற தெருவோர உணவுகளை விரும்பி உட்கொள்வதாகப் புகழ்பெற்ற ராடிக்கல் ஸ்டோரேஜ் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அதிகம் பார்வையிடப்பட்ட முன்னணி நகரங்களில் உள்ள தெருவோர உணவகங்களின் எண்ணிக்கை, நான்கு நட்சத்திரங்களுக்கு மேல் பெற்ற வெண்டர்களின் விவரங்கள், உணவு வகைகள், சைவ மற்றும் அசைவ அடிப்படையிலான விருப்பங்கள் மற்றும் விலை வரம்புகள் போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள உலகின் தலைசிறந்த 10 தெருவோர உணவு நகரங்களின் பட்டியலில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரம் 7.2 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.
இந்தத் தரவரிசையில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஏதென்ஸ் மற்றும் தெசலோனிக்கி நகரங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைக் கைப்பற்றித் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளன. மேலும், பார்சிலோனா, லண்டன், ரோடுஸ், ரோம், ஹனோய், புடாபெஸ்ட் மற்றும் ஆம்ஸ்டர்டாம் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளதோடு, லண்டன் நகரம் அதிகளவிலான உணவு வகைகளிலும், எடின்பர்க் நகரம் தாவர அடிப்படையிலான சைவ உணவுகளிலும் முன்னிலை வகிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
