மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், 14 வயது சிறுவன் ஒருவன் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மூதாட்டிகளைத் தடியால் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த முதியோர் இல்லத்தில் வசித்து வந்த முதியவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்தூர் மரிமாதா தண்ணீர் தொட்டி அருகே உள்ள மகாராணா பிரதாப் நலச் சங்கத்திற்குச் சொந்தமான முதியோர் இல்லத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த வைரல் வீடியோவில், 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கையில் தடியை வைத்துக் கொண்டு, அங்கிருந்த வயதான மூதாட்டிகளைத் தாக்கும் கொடூரக் காட்சி பதிவாகியுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வீடியோ வைரலானதும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நேரில் சென்று அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
निराश्रय बुजुर्गों की सुरक्षा को लेकर हम कितने बेफिक्र रहते हैं, घर नहीं समाज की संवेदना नहीं…इंदौर की तस्वीर है बताया जा रहा है जो नाबालिग बुजुर्गों पर लाठी चला रहा है वो मानसिक रूप से परेशान है और संस्था चलने वालों के पास पूरे दस्तावेज नहीं हैं! pic.twitter.com/6h2Ts4iefR
— Anurag Dwary (@Anurag_Dwary) July 30, 2026
போலீசார் நடத்திய விசாரணையில், அந்தச் சிறுவனின் மனநிலை சரியாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. சுமாார் ஐந்து மாதங்களுக்கு முன்பு தனது தாயுடன் அந்த முதியோர் இல்லத்திற்கு வந்த அந்தச் சிறுவனின் தாய், தீக்காயங்கள் ஏற்பட்டு சில நாட்களில் பரிதாபமாக இறந்துபோனார். அதன் பிறகு அந்தச் சிறுவன் அங்கேயே தங்கி வந்துள்ளான். புதன்கிழமை அன்று ஒரு மூதாட்டியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிறுவன், அங்கிருந்தவர்களைத் தடியால் தாக்கத் தொடங்கியுள்ளான். அவரை தடுத்தவர்களையும் அவன் தாக்கியுள்ளான்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முதியோர் இல்லத்தில் இருந்த 30 முதியவர்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். உடல் நலம் நன்றாக உள்ளவர்கள் காந்தி நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கும், மற்றவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்படுகின்றனர். மேலும், அந்த முதியோர் இல்லத்திற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதோடு அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அந்தச் சிறுவனுக்கு உரிய மனநல கவுன்சிலிங் வழங்கப்பட்டு, குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
