குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காணாமல் போயிருந்த ஜிிக்னேஷ் மாவாடியா என்ற நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸார் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர். ஜிக்னேஷின் மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து, அவரது மதுபானத்தில் சயனைடு விஷம் கலந்து கொன்றுள்ளனர். பின்னர் ஒரு தொழிற்சாலையில் 12 அடி ஆழத்தில் குழி தோண்டி சடலத்தைப் புதைத்துவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்ததை மறைப்பதற்காக ஜிக்னேஷின் மனைவி குடும்பத்தினரிடம் பெரும் நாடகம் ஆடியுள்ளார். அவர் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்றுவிட்டதாக நம்பவைத்தார். அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் தொலைபேசியில் பேச அனுமதியில்லை என்று கூறியதால், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குடும்பத்தினரால் ஜிக்னேஷைத் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் நிரந்தர குடியுரிமை கிடைத்ததும் அவர் ஊருக்குத் திரும்புவார் என்று கூறி ஏமாற்றியதால், யாருக்கும் எந்தச் சந்தேகமும் எழவில்லை.
ஆனால், ஜிக்னேஷின் உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டு அவரிடம் முகவரியைக் கேட்டபோதுதான் இந்தச் சதி வெளிச்சத்துக்கு வந்தது. மனைவி முறையான பதளிக்காமல் மழுப்பியதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீஸில் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளனர். அதன்பிறகு தீவிர விசாரணை நடத்தியதில், கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதமே தாங்கள் இந்தத் கொலையைச் செய்ததாக மனைவியும் அவரது காதலன் நிலேசும் ஒப்புக்கொண்டனர்.
தற்போது இந்த வழக்கில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில், அந்தத் தொழிற்சாலை வளாகத்தில் தோண்டி உடலின் எஞ்சிய பாகங்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தன் சொந்தக் கணவனையே காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொன்றுவிட்டு, ஆஸ்திரேலியாவில் வசிப்பதாகக் கூறி இரண்டு ஆண்டுகள் நாடகமாடிய மனைவியின் இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
