கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா பகுதியில், பள்ளி மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய ஆசிரியைகளே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமக்ர சிக்ஷா கேரளா அமைப்பின் கீழ் இயங்கும் பி.ஆர்.சி மையத்தில் சிறப்பு ஆசிரியைகளாகப் பணியாற்றி வந்த மூன்று பெண்கள், ரகசியமாகச் செயற்கைப் போதைப்பொருளான ‘எம்.டி.எம்.ஏ’ கடத்தலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதச் சம்பளமாக வெறும் 12,000 முதல் 13,000 ரூபாய் மட்டுமே வாங்கி வந்த இந்த ஆசிரியைகளின் வங்கிக் கணக்கில், லட்சக்கணக்கில் பணம் புழங்கியதைக் கண்டு மாநில போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆரம்பத்தில் தங்களது சொந்தத் தேவைக்காகப் போதைப்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கிய இந்த ஆசிரியைகள், நாளடைவில் பணப் பற்றாக்குறை காரணமாக அதை விற்கும் ஏஜென்ட்களாகவே மாறினர். போலீசாருக்குச் சந்தேகம் வராமல் இருக்க, தங்களது ஆடம்பர வாழ்க்கையை மறைக்க ‘ஜும்பா’ நடனப் பயிற்சிகளை நடத்தி வந்தனர். அத்துடன் உணவுப் பொருட்கள் விற்பனையையும் ஒரு போர்வையாகப் பயன்படுத்தியுள்ளனர். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களைப் பிடித்து, பெங்களூரிலிருந்து போதைப்பொருட்களைக் கடத்தி வந்து கேரளாவில் விநியோகித்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு வளைகுடா நாட்டின் செல்போன் எண்ணைக் கொடுத்துப் பேச வைத்து, ஆன்லைன் மூலம் பணம் வந்தவுடன் குறிப்பிட்ட ஒரு இடத்தில் போதைப்பொருளை மறைத்து வைத்து எடுக்கச் சொல்லும் பாணியைப் பின்பற்றியுள்ளனர்.
போலீசாரின் ‘ஆபரேஷன் தூபான்’ என்ற தீவிர நடவடிக்கையின் போது, கடந்த ஜூன் 26-ஆம் தேதி சப்வான் என்பவரிடம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த க்யூஆர் கோடு மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோதே, உடற்கல்வி ஆசிரியை கீர்த்தனா, ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியை காவ்யா மற்றும் பயிற்சியாளர் நிஷ்மா ஆகியோரின் பெயர்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன. ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து இந்த மூன்று ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்ந்து பெங்களூரிலிருந்து போதைப்பொருளைக் கடத்தி வந்து டெலிவரி செய்து வந்த ஜிகில் குரியாகோஸ் என்ற உணவு டெலிவரி ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியைகள் என்பதால் பள்ளி மாணவர்களையும் இந்த வலையில் வீழ்த்தியிருப்பர்களோ என்ற அச்சம் எழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், பிற ஆசிரியர்களை இதில் சேர்க்க முயன்றுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியைகள் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள சிறப்பு ஆசிரியர்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
