தமிழ் சினிமாவின் பொற்காலமான 80-களில் தொடங்கி இன்றுவரை ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலின் குடும்பப் பின்னணி மற்றும் அவரது மகனின் நெகிழ்ச்சியான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கவுண்டமணி – செந்தில் கூட்டணியின் காமெடிக் காட்சிகள் இன்றும் தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் பலத்த வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் செந்திலின் திரைக்குப் பின்னால் உள்ள தியாகங்களை அவரது மகன் வெளிப்படுத்தியுள்ள விதம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 1979-ஆம் ஆண்டு வெளியான ‘பசி’ படத்தின் மூலமாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்த செந்தில், தொடக்கக் காலத்தில் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார். இருப்பினும், நடிகர் கவுண்டமணியுடன் அவர் இணைந்து அமைத்த நகைச்சுவிக் கூட்டணி தமிழக மக்களிடையே அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தது.

இவர்களின் காம்போவில் வெளியான காமெடி காட்சிகளைத் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் தேடிப் பார்த்து ரசிக்கும் பெருங்கூட்டம் இன்றும் குறையாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1984-ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நடிகர் செந்திலுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தங்களது குடும்பத்தை உயர்த்த அவர் பட்ட சிரமங்கள் குறித்து அவரது மகன் மனம் திறந்து பேசியுள்ளார்.

சிறுவயதில் தங்களது தந்தையிடம், “ஏன் நீங்கள் எப்போதும் படங்களில் அடி வாங்கும் கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறீர்கள்? ஒரு முறையாவது வில்லனைத் திருப்பி அடிக்கும் வேடங்களில் நடிக்கலாமே?” என்று தாங்கள் கேள்வியெழுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு நடிகர் செந்தில், “இயக்குநரின் கற்பனைக்குத் தகுந்தபடி நாம் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, அதில் மாற்றங்களைச் சொல்ல முடியாது” என்று பக்குவமாகப் பதிலளிப்பாராம்.

ஆனால், பல ஆண்டுகள் கழித்து இப்போது திரும்பிப் பார்க்கும்போதுதான், தங்களது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகத் தன் தந்தையே முன்வந்து அந்தச் சிரமமான மற்றும் கேலிக்குரிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார் என்ற உண்மையை இப்போது தாங்கள் உணர்ந்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.