நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ஜென் Z பாணியிலான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ, தற்போது உலக அளவில் மிகப்பிரபலமான சாதனையைப் படைத்துள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு 11:52 மணியளவில் பதிவேற்றப்பட்ட இந்த விடியோ, வெளியான வெறும் 24 மணி நேரத்திற்குள் 303 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து, உலகத்திலேயே அதிக மக்களால் பார்க்கப்பட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன்பு பிரபல யூடியூபர் ஐஷோஸ்பீட் (IShowSpeed) மற்றும் பிடிஎஸ் குழுவினர் இணைந்து 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது வெளியிட்ட 300 மில்லியன் பார்வையிட்ட சாதனையை பிரதமர் மோடியின் இந்த வீடியோ முறியடித்துள்ளது. வழக்கமான பாரம்பரிய அரசு அறிக்கைகளைப் போலல்லாமல், இன்றைய இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் செல்ஃபி பாணி குறும்பட வடிவத்தில் பிரதமர் மோடி இந்த வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்த ஒரே ஒரு வீடியோவின் மூலம் அவருக்கு புதிதாக கிட்டத்தட்ட 1 மில்லியன் ஃபாலோயர்கள் இணைந்துள்ளனர், இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோயர்களைக் கடந்த உலகின் முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை அவர் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
View this post on Instagram
இந்த வைரல் வீடியோவில் நீட் தேர்வு விவகாரம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “பேப்பர் லீக் எந்தளவுக்குப் பெரிய விஷயம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனையை அளித்துள்ளது” என்று உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த இரண்டரை மாதங்களாகத் தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். மாணவர்கள் தங்களது ஒரு கல்வி ஆண்டை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, கிட்டத்தட்ட 22 லட்சம் மாணவர்களுக்கான தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்துடன் நின்றுவிடாமல், சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் அடுத்த வாரக் கூட்டத்தொடரிலேயே புதிய சட்டம் தொடர்பான மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டின் பிரதமரே நேரடியாகச் சமூக வலைதளம் வாயிலாகக் களத்தில் இறங்கி விடை அளித்திருப்பதுடன், சர்வதேச அளவில் சாதனை படைத்திருப்பது தற்போது தேசிய அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
View this post on Instagram
