ஹரியானாவின் மில்லினியம் சிட்டியான குருகிராம் நகரில் அமைந்துள்ள பிரபல ஒயின் ஷாப் ஒன்று தற்போது நாடு முழுவதும் உள்ள மதுப்பிரியர்களின் பேசுபொருளாகியுள்ளது. ஸ்காட்லாந்தில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ‘தி பால்வெனி 50 இயர் ஓல்ட் சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் விஸ்கி’ என்ற உலகப் புகழ்பெற்ற அதிநவீன மதுபானத்தின் ஒற்றைப் பாட்டில் தற்போது அங்குள்ள கடைக்கு விற்பனைக்காக வந்துள்ளது.
உலகளவில் மொத்தம் 125 பாட்டில்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த அரியவகை விஸ்கியின் ஒரே ஒரு பாட்டில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதுவும் தங்களது கடையில் மட்டுமே இருப்பதாகவும் கடை உரிமையாளர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
பழமை வாய்ந்த இந்த விஸ்கி பாட்டிலின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 75 லட்சம் ரூபாய் என்பதால், அதற்குத் தகுந்தாற்போலக் கடையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகத் தனிப்பட்ட தனியார் காவலாளிகள் துப்பாக்கி ஏந்திப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பாட்டில் திருடப்படாமல் இருக்கப் பாதுகாப்பு அறை போன்ற தனிப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
இதைக் கண்டுகளிப்பதற்காகவும், தங்களது செல்ஃபி மோகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காகவும் டெல்லி-என்சிஆர் பகுதியிலிருந்து இளைஞர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் அந்த ஒயின் ஷாப்பை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் அந்த மதுக்கடை தற்போது ஒரு சுற்றுலாத் தலம் போல பரபரப்பாக மாறிவிட்டது.
இந்தக் கடையில் இந்த விஸ்கியின் ஒரு சின்ன 30 மில்லி பெக்கின் விலை கூட சாதாரண மக்களின் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு மிக அதிக விலைக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரிய மது பாட்டிலை விலைக்கு வாங்குபவர்களுக்குச் சிறப்புப் பரிசாக ஒரு மோட்டார் சைக்கிள் லக்கி டிராவில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த கார்கள் மற்றும் ஆடம்பர வீடுகளைப் போலவே தங்களது வீட்டு பார் கேபினட்டுகளிலும் இதுபோன்ற விலையுயர்ந்த மது பாட்டில்களைச் சேகரிப்பதைக் குருகிராம் வாழ் எட்டீட் வகுப்பினர் தங்களது தகுதியின் அடையாளமாகக் கருதுகின்றனர். இந்தச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி பெரும் வைரலாகி வருகிறது.
